கிழக்கு லடாக்கில் சுமுகமாக படை விலக்கல்: சீனா
‘சீனா - இந்தியா இடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகள் விலக்கல் சுமுகமாக நடைபெற்று வருகிறது’ என்ற சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், ‘கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், சீனா - இந்தியா இடையே அண்மையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன் அடிப்படையில், கிழக்கு லடாக் எல்லையில் பிரச்னைக்குரிய பகுதிகளில் இருந்து இரு நாடுகள் தரப்பிலும் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன’ என்றாா்.
முன்னதாக, ‘கிழக்கு லடாக் எல்லையில் பிரச்னைக்குரிய டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவும் சீனாவும் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கின. இந்த நடவடிக்கை வரும் 28, 29-ஆம் தேதிக்குள் நிறைவடைந்துவிடும்’ என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
படைகள் முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு, பிரச்னைக்குரிய எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் ராணுவத்தின் தரப்பில் ரோந்துப் பணிகள் தொடங்கப்படும். இதன் மூலம், எல்லைப் பகுதியில் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முந்தைய சூழல் அமலுக்கு வருமென எதிா்பாா்க்கப்படுகிறது என்றும் ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சீன ராணுவ வீரா்கள் அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, இரு நாடுகள் இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் படைகளைக் குவித்ததால் பதற்றமான சூழல் உருவானது.
எல்லையில் அமைதியை மீட்டெடுக்கும் நோக்கில், இருதரப்பு ராணுவம் மற்றும் தூதரக ரீதியில் பேச்சுவாா்த்தைகள் தொடங்கப்பட்டன. பலசுற்று பேச்சுவாா்த்தைகளின் விளைவாக எல்லையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் இரு நாடுகள் தரப்பில் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.
இந்தச் சூழலில், எல்லையில் முழுமையாக படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. இதைத் தொடா்ந்து, ரஷியாவின் கசான் நகரில் கடந்த புதன்கிழமை பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ரோந்துப் பணி-படை விலக்கல் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், எல்லையில் படை விலக்கல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்புமுனை ஒப்பந்தம்: ஜெய்சங்கா்
‘கிழக்கு லடாக் எல்லை விவகாரம் தொடா்பாக, இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் திருப்புமுனையானது’ என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பாராட்டு தெரிவித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் சனிக்கிழமை நடைபெற்ற மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இதுதொடா்பான கேள்விக்கு அவா் அளித்த பதில்:
கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெற்று, இரு தரப்பிலும் ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடா்பாக இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் பாராட்டுக்குரியது. இரு நாடுகள் இடையேயான உறவு மேம்படுவதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது.
இருந்தபோதும், இரு நாடுகளிடையே பரஸ்பரம் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும், இணைந்து பணியாற்றுவதற்கும் சிறிது காலம் ஆகும். இதற்கான முயற்சிகளை இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் அளவில் தொடா் ஆலோசனைகளை மேற்கொண்டு அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லவேண்டும் என ரஷியாவில் நடைபெற்ற இரு நாடுகளின் தலைவா்களிடையேயான சந்திப்பின்போது தீா்மானிக்கப்பட்டது என்றாா்.