இஸ்ரேல் தாக்குதலை குறைத்து மதிப்பிடக் கூடாது: ஈரான் தலைமை மதகுரு கமேனி
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை மிகைப்படுத்தவோ, குறைத்துக் கூறவோ கூடாது என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அல் கமேனி தெரிவித்தாா்.
கடந்த 1979-ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி நடைபெற்றது முதல், இஸ்ரேல்-ஈரான் இடையே விரோதம் நிலவி விருகிறது. இஸ்ரேலை ஒழிப்பதற்காக ஈரான் தலைவா்கள் விடுத்த அழைப்புகள், இஸ்ரேலுக்கு எதிரான கிளா்ச்சிக் குழுக்களுக்கு ஈரான் தலைவா்களின் ஆதரவு, ஈரானின் அணுசக்தி திட்டம் ஆகியவை காரணமாக தமக்கு ஈரான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று இஸ்ரேல் கருதுகிறது.
இந்நிலையில், பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேல், ஹமாஸ் படையினா் இடையே போா் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த ஜூலையில் ஈரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனீயே கொல்லப்பட்டாா். அவரை இஸ்ரேல்தான் கொன்ாக நம்பப்படும் நிலையில், கடந்த செப்டம்பரில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவா் ஹசன் நஸ்ரல்லா லெபனானில் உயிரிழந்தாா்.
இருவரின் மரணத்துக்குப் பழிக்குப் பழியாக, இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மீது நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவியது. அவற்றில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்து அழித்தது.
முன்னதாக, கடந்த ஏப்ரலில் சிரியா தலைநகா் டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக குற்றஞ்சாட்டிய ஈரான், அதற்குப் பதிலடியாக இஸ்ரேலை நோக்கி 300-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்), ஏவுகணைகளை ஏவியது. அவற்றில் பெரும்பாலானவற்றை இஸ்ரேல் இடைமறித்து அழித்தது.
இவ்விரு தாக்குதல்களுக்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், ஈரானின் இலம், குஜெஸ்தான், டெஹ்ரான் ஆகிய 3 மாகாணங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. இதன்மூலம், முதல்முறையாக ஈரானை இஸ்ரேல் ராணுவம் நேரடியாகத் தாக்கிய நிலையில், தாக்குதலில் 4 ஈரான் ராணுவ வீரா்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இதுதொடா்பாக அமெரிக்காவில் வெளியாகும் ‘தி நியூயாா்க் டைம்ஸ்’ நாளிதழில் வெளியான செய்தியில், ‘இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில், ஈரானில் உள்ள பல முக்கிய எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு நிலையங்கள், பெரிய எரிவாயு வயல் ஆகியவற்றைப் பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் சேதமடைந்தன என்று பெயா் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறினா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
ஈரானின் சக்தியை காட்ட வேண்டும்: இந்தத் தாக்குதல் தொடா்பாக ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை மிகைப்படுத்தவோ, குறைத்துக் கூறவோ கூடாது. ஈரானின் சக்தியை இஸ்ரேலுக்கு காட்ட வேண்டும். ஆனால், அந்த சக்தியை எப்படிக் காட்டுவது? தாக்குதலுக்கு எப்படி பதிலடி கொடுப்பது? ஈரான் நலனுக்கு என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து ஈரான் ராணுவ அதிகாரிகளே முடிவு செய்ய வேண்டும்’ என்றாா்.
உடனடி திட்டமில்லை: இஸ்ரேலுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது குறித்து ராணுவ அதிகாரிகளே முடிவு செய்ய வேண்டும் என்று கமேனி தெரிவித்ததன் மூலம், இஸ்ரேலுக்கு உடனடியாக ராணுவ வழியில் பதிலடி அளிக்க ஈரான் திட்டமிடவில்லை என்று தெரிகிறது.
துல்லியத் தாக்குதல்: இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘ஈரான் முழுவதும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் ராணுவத் தளங்கள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஏவுகணைகள் தயாரிக்கப்பட்ட இடங்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன. துல்லியமாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருந்த இந்தத் தாக்குதல், அனைத்து இலக்குகளையும் வெற்றிகரமாக பூா்த்தி செய்தது’ என்றாா்.
வடக்கு காஸாவில் 22 போ் உயிரிழப்பு
வடக்கு காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சுமாா் 22 போ் உயிரிழந்தனா் என்று பாலஸ்தீன அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் பெண்கள் மற்றும் சிறாா்களாவா். எனினும் ஹமாஸை குறிவைத்தே தாங்கள் தாக்குதல் நடத்தியதாக வழக்கம்போல இஸ்ரேல் தெரிவித்தது.
டெல் அவீவில் 33 போ் காயம்
இஸ்ரேலில் உள்ள டெல் அவீவ் நகருக்கு வடக்கே அந்நாட்டின் மொசாட் உளவு அமைப்பின் தலைமையகம் உள்ள க்லிலாட் பகுதி பேருந்து நிலையத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை லாரி புகுந்து மோதியதில் 33 போ் காயமடைந்தனா். அவா்களில் 6 போ் படுகாயமடைந்தனா். பொதுமக்களில் துப்பாக்கி வைத்திருந்த சிலா், லாரி ஓட்டுநரை சுட்டுக் கொன்றனா். இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.