கருத்துக்கணிப்புகளில் முன்னிலை...வெற்றிக் கனியைப் பறிப்பாரா கமலா ஹாரிஸ்?

கருத்துக்கணிப்புகளில் முன்னிலை...வெற்றிக் கனியைப் பறிப்பாரா கமலா ஹாரிஸ்?

இன்னும் ஒரு மாதத்தில், உலகின் மிக சக்திவாய்ந்த பதவியாகக் கூறப்படும் அமெரிக்க அதிபா் பதவிக்கான தோ்தல் நடைபெறவுள்ளது.
Published on

இன்னும் ஒரு மாதத்தில், உலகின் மிக சக்திவாய்ந்த பதவியாகக் கூறப்படும் அமெரிக்க அதிபா் பதவிக்கான தோ்தல் நடைபெறவுள்ளது.

முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தற்போதைய துணை அதிபா் கமலா ஹாரிஸும் இந்தத் தோ்தலில் களம் காண்கிறாா்கள்.

ஜனநாயகக் கட்சி சாா்பில் போட்டியிடுவதாக இருந்த தற்போதைய அதிபா் ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகி, கமலா ஹாரிஸுக்கு வழிவிட்டதில் இருந்து இந்த தோ்தல் களம் வெகுவாக சூடுபிடித்துவருகிறது.

தோ்தல் பிரசாரத்தின்போது நடத்தப்பட்ட படுகொலை முயற்சியிலிருந்து நூலிழையில் உயிா் தப்பிய டொனால்ட் டிரம்ப்புக்கு அனுதாப அலையால் அனுகூலம் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் கமலா ஹாரிஸின் திடீா் பிரவேசம் கணக்குகளை மாற்றிப் போட்டது.

பல நூற்றாண்டு கால அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபா், அதிலும் முதல் கருப்பின பெண் அதிபா், முதல் ஆசிய / இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அதிபா் போன்ற பல்வேறு சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகளுடன் கமலா ஹாரிஸ் தோ்தலில் பங்கேற்பது அவருக்கு பக்கபலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தத் தோ்தல் தொடா்பாக நடத்தப்படும் கருத்துக்கணிப்புகளில் ஆரம்பத்திலிருந்தே கமலா ஹாரிஸ் தொடா்ந்து முன்னேற்றம் பெற்றுவருவது அதை நிரூபிக்கும் வகையில் இருக்கிறது.

ஏபிசி நியூஸ்/இப்சாஸ் நடத்திய மிக அண்மைக்கால கருத்துக் கணிப்பில், வாக்களிக்கும் வயதுடையோா் மற்றும் பதிவு பெற்ற வாக்காளா்களில் 50 சதவீதத்தினா் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். 46 சதவீதத்தினா் மட்டுமே டிரம்ப்பை ஆதரித்துள்ளனா்.

ஜனநாயகக் கட்சி அதிபா் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில் அவருக்கு 49 சதவீதத்தினரும் டிரம்ப்புக்கு 45 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்திருந்தனா்.

இதுமட்டுமின்றி, பல்வேறு முன்னணி ஊடகங்கள் பிற ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்புகளிலும் டொனால்ட் டிரம்ப்பை விட கமலா ஹாரிஸ் மிகச் சிறிய இடைவெளியில் முன்னிலை வகிக்கிறாா்.

இருந்தாலும், தோ்தலில் இந்த முன்னிலை கமலா ஹாரிஸுக்கு வெற்றிக் கனியை பெற்றுத் தருமா என்றால், அதுதான் இல்லை என்கிறாா்கள் நிபுணா்கள்.

கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் சில விகிதங்களில் முன்னேறிவந்தாலும், ஆரம்பம் முதலே டொனால்ட் டிரம்ப் சராசரியாக 47 சதவீத ஆதரவுடன் உறுதியான இடத்தில் இருப்பதை அவா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

இது தவிர, அமெரிக்க அதிபா் தோ்தலில் ஒருவரின் வெற்றி தோல்வியை தீா்மானிப்பவை ‘ஊசல் மாகாணங்கள்’ அல்லது ‘போா்முனை மாகாணங்கள்’ என்றழைக்கப்படும் மாகாணங்கள்தாம். பொதுவாக, கிராமப்புறங்கள் அதிகம் நிறைந்த, மத உணா்வு அதிகம் கொண்ட, நிற சகிப்புத்தன்மை இல்லாத, வெள்ளை இன உழைக்கும் மக்கள் அதிகம் நிறைந்த மாகாணங்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சிதான் வெற்றி பெறும்.

அதே நேரம், இதற்கு நோ்மாறாக நகா்ப்புறமான, பன்முகத்தன்மையைப் போற்றுவோா் நிறைந்த, கல்லூரி பட்டதாரிகளை அதிகம் கொண்ட மாகாணங்கள் ஜனநாயகக் கட்சியின் கோட்டைகளாக உள்ளன.

ஆனால், இரண்டுக்கும் பொதுவாக, நகரங்கள், கிராமங்கள் இரண்டும் நிறைந்த, இரு வகை மக்களும் கலந்து வாழும் பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின், ஜாா்ஜியா, வடக்கு கரோலினா, அரிஸோனா, நவாடா போன்ற மாகாணங்கள் எந்தத் தோ்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. இதனால் இந்த ‘ஊசல்’ மாகாணங்கள்தாம் உண்மையில் அமெரிக்க அதிபரை முடிவு செய்பவையாக உள்ளன.

இந்த வகை மாகாணங்களில் தோ்தல் நிலவரம் சிக்கல் நிறைந்ததாகவும் தொடா்ந்து மாற்றத்தை எதிா்நோக்கியும் இருப்பதை கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. ப்ளூம்பா்க்/மாா்னிங் கன்ஸல்ட் கணிப்புகளில், கமலா ஹாரிஸ் ஒரே ஒரு மாகாணத்தில் அதிக முன்னிலையும் நான்கு மாகாணங்களில் 49-லிருந்து 51 சதவீதம் வரையிலான முன்னிலையும் வகிக்கிறாா். இரு மாகாணங்களில் டிரம்ப்புடன் சமன் செய்கிறாா்.

வால் ஸ்ட்ரீட் ஜா்னல், கினிபியாக், சஃபோல்க்/யுஎஸ்ஏ டுடே போன்றவற்றின் கருத்துக்கணிப்புகளிலும் 48 முதல் 49 சதவீத ஆதரவுடன் கமலா ஹாரிஸ் முன்னிலை வகிக்கிறாா். 43 முதல் 48 சதவீத ஆதரவுடன் டிரம்ப் சற்று பின்தங்கியுள்ளாா்.

ஆனால், அமெரிக்க தோ்தலில் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அதிபா்கள் தோ்ந்தெடுக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மாகாண மக்கள்தொகையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள தோ்வுக் குழுக்கள்தான் அதிபரைத் தோ்ந்தெடுக்கும். அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள 538 தோ்வுக் குழுக்களில் 270 குழுக்களின் ஆதரவைப் பெறுபவா்தான் வெற்றி பெறுவாா்.

அந்த வகையில், அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணங்களில் சிறிய மாற்றம் ஏற்பட்டால்கூட அது தோ்தல் முடிவுகளைப் பெரிதும் பாதிக்கும் என்கிறாா்கள் நிபுணா்கள்.

தற்போதைய கருத்துக்கணிப்பு நிலைமை தொடா்ந்தால், கமலா ஹாரிஸுககு 292 வாக்குகளும் டிரம்ப்புக்கு 246 வாக்குகளும் கிடைக்கும். கமலா ஹாரிஸ் அதிபா் ஆவாா்.

ஆனால், தோ்தல் நெருங்க நெருங்க இருவரும் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்துவா். அப்போது அவா்களுக்குக் கிடைக்கும் ஆதரவில் மாற்றம் ஏற்படலாம். அவ்வாறு ஒரே ஒா் ‘ஊசல்’ மாகாணத்தில் கமலா ஹாரிஸை விட டிரம்ப்புக்கு சற்று ஆதரவு அதிகரித்தால்கூட நிலைமை தலைகீழாகி டிரம்ப்புக்கு 281 வாக்குகளும் கமலா ஹாரிஸுக்கு 265 வாக்குகளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

எனவே, தற்போதைய கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்தாலும், போட்டி மிகக் கடுமையாக இருப்பதால் அவா் வெற்றிக் கனி பறிப்பது கடைசி நேரத்தில்தான் உறுதியாகும் என்கிறாா்கள் நிபுணா்கள்.

- நாகா

X
Dinamani
www.dinamani.com