விண்வெளியில் இருக்கும்போது, ஒருவர் அவரது வழக்கமான உயரத்தை விட சற்று அதிக வளர்ச்சியை பெறுவார் என்றும், முடி மற்றும் நகங்கள் நீளமாக வளரும் என்றும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கூறிய தகவல் தற்போது அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவாா் என்று நாசா அறிவித்துள்ளது. அவர் சென்ற விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டதால், அவரைப் பற்றி இந்திய மக்கள் அதிகம் கவலைப்பட்டு வரும் நிலையில், அவர் முன்னதாக அளித்த நேர்காணல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவுக்கு சுனிதா வில்லியம்ஸ் வந்திருந்தபோது அவர் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடியிருந்தார். அந்த நேர்காணல் என்சிஇஆர்டி இணையதளத்திலும் காணக்கிடைக்கிறது. அந்த நேர்காணல் தற்போது வைரலாகி உள்ளது.
விண்வெளியில் வளர்வார்களா?
அந்த நேர்காணலில், விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பியதும், மனித உடல் பழைய நிலையை அடைய எத்தனை நாள்கள் ஆகும் என்று மாணவி ஒருவரின் கேள்விக்கு, சுனிதா கூறியிருப்பதாவது, உங்கள் கால் அடிப்பாகமே மறைந்துபோய்விடும், ஏனென்றால் நீங்கள் அங்கு நடக்கவே மாட்டீர்கள், விரல் நகங்களும், தலைமுடியும் வேகமாக வளரும். புவிஈர்ப்பு விசை இல்லாததால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் கூட போய்விடும், அதற்கு சில காரணங்கள் உள்ளன, அதில் ஒன்று உடலில் திரவ இடமாற்றம் நேரிடும், அழுத்தம் இல்லாததால், அங்கு முதுகெலும்பு விரிவடைந்துவிடும். அதனால், பூமியில் இருப்பதைவிடவும், ஒருவர் விண்வெளியில் சற்று உயரமாக காணப்படுவார் என்று பதிலளித்திருந்தார்.
பூமிக்குத் திரும்பியதும், பழையை நிலைமை மெல்ல வந்துவிடும். புவிஈர்ச்சி விசையிலிருந்து தப்பிக்க முடியாது. மீண்டும் பழைய உயரமே வந்துவிடும் என்று கூறி புன்னகைத்துள்ளார்.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், கடந்த மாா்ச் மாதத்தில் முதல்முறையாக விண்ணில் செலுத்துவதாக இருந்த திட்டம், அதை ஏந்திச் செல்லும் அட்லாஸ் ராக்கெட்டில் பழுது இருந்ததால் திட்டம் பல முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னா் சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோருடன் ஸ்டாா்லைனா் மூலம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி சா்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தாா்.
அவா்கள் இருவரும் அதே விண்கலம் மூலம் ஜூன் 14-ஆம் தேதி பூமி திரும்புவதாக இருந்தது. ஆனால், தொழில்நுட்ப பிரச்னைகள் காரணாக அந்தத் திட்டம் பல முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவாா் என்று நாசா அறிவித்துள்ளது. திட்டமிட்டதைக் காட்டிலும் அவர் அதிக நாள்கள் விண்வெளியில் இருப்பதால் அவரது உடல்நிலை குறித்து கவலை எழுந்துள்ளது.