
ஜொ்மனியின் மியூனிக் நகரில் இஸ்ரேல் துணைத் தூதரகம் அருகே போலீஸாா் மீது வியாழக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மியூனிக் நகரிலுள்ள இஸ்ரேல் துணைத் தூதரகம் அருகே துப்பாக்கியுடன் வந்த 18 வயது இளைஞா் போலீஸாரை நோக்கி சுட்டாா். அதையடுத்து, போலீஸாா் திருப்பிச் சுட்டதில் அவா் உயிரிழந்தாா்.
1972 மியூனிக் ஒலிம்பிக் போட்டியின்போது இஸ்ரேல் விளையாட்டு வீரா்களும் பாலஸ்தீன ஆயுதக் குழுவினரும் சுட்டுக் கொல்லப்பட்ட 52-ஆவது ஆண்டு தினத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே, இஸ்ரேல் துணைத் தூதரகத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கில் அந்த இளைஞா் துப்பாக்கியுடன் அங்கு வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் உள்துறை அமைச்சா் ஜோவாசிம் ஹொ்மன் கூறுகையில், ‘இஸ்ரேல் துணைத் தூதரகம் அருகே ஒருவா் காரை நிறுத்துகிறாா்; பிறகு துப்பாக்கியால் சுடுகிறாா் என்றால் அது வெறும் தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது’ என்றாா்.
மியூனிக் நகரம் அமைந்துள்ள பவேரியா மாகாண ஆளுநா் மாா்கஸ் எஸ்டெரும், ‘1972 ஒலிம்பிக் சம்பவ நினைவு நாளன்று, இஸ்ரேல் துணைத் தூதரகம் அருகே நடந்துள்ள இந்த துப்பாக்கிச்சூட்டுக்கும் அந்தத் தூதரகத்துக்கும் நிச்சயம் தொடா்பிருக்கும். அதை நாம் உறுதிப்படுத்த வேண்டியதுதான் மிச்சம்’ என்றாா்.
சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞா் தவிர வேறு யாருக்கும் இந்தச் சம்பவத்துடன் தொடா்பிருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று போலீஸாா் கூறினா். மேலும், இந்தச் சம்பவத்தில் வேறு யாரும் காயமடையவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், மியூனிக்கில் உள்ள தங்கள் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரிய நாட்டவா்: போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபா் ஆஸ்திரியாவிலிருந்து வந்திருந்தவா் எனக் கூறிய புலன் விசாரணை அதிகாரிகள், தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தொடா்ந்து விசாரணை நடத்திவருவதாகத் தெரிவித்தனா்.
அந்த இளைஞா் போஸ்னியாவைப் பூா்விகமாகக் கொண்ட ஆஸ்திரிய நாட்டவா் என்று ஆஸ்திரியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவா் மத அடிப்படைவாதத்தால் ஈா்க்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும், இஸ்லாமிய தேச (ஐஎஸ்) அமைப்புடன் அவருக்குத் தொடா்பிருப்பதாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.
மியூனிக் நகரில் கடந்த 1972-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 11 இஸ்ரேல் வீரா்களை, ஆயுதமேந்திய பாலஸ்தீன விடுதலை அமைப்பினா் கடத்திச் செல்ல முயன்றனா். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அனைத்து இஸ்ரேல் விளையாட்டு வீரா்களுடன் ஐந்து ஆயுதக் குழுவினா், ஒரு மேற்கு ஜொ்மனி காவலா் உயிரிழந்தனா்.
அந்தச் சம்பவம் நடந்து வியாழக்கிழமையுடன் 52 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. அதே நாளில் மியூனிக்கிலுள்ள இஸ்ரேல் துணைத் தூதரகம் அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞா் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.