கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகக் காணப்படாத கடும் வறட்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது தென் அமெரிக்க நாடான பிரேசில்!
உலகில் பரப்பளவிலும் மக்கள்தொகையிலும் ஐந்தாவது பெரிய நாடான பிரேசில் நாட்டின் 59 சதவிகித பகுதிகள் – ஏறத்தாழ அமெரிக்காவில் பாதியளவு – வறட்சியில் தவிக்கின்றன.
இந்தப் பகுதியிலுள்ள அமேசான் பள்ளத்தாக்கு ஆறுகள் எல்லாமும் வரலாறு காணாத அளவுக்கு வற்றிப் போய்விட்டன. பாதுகாக்கப்பட்ட அடர்ந்த காடுகளில்கூட கட்டுப்பாடு எதுவுமில்லாமல் மக்கள் தீவைப்பதால் காற்றின் தரமும் மிகவும் குறைந்துபோய்விட்டிருக்கிறது.
வடக்கிலிருந்து நாட்டின் தென் கிழக்குப் பகுதி வரையிலும் வறட்சியால் பீடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை; வரலாற்றில் மிகவும் மோசமான, பரவலான வறட்சியும் இதுதான் என்று கூறப்படுகிறது.
ஸ்விட்சர்லாந்து நிறுவனமான ஐக்யு ஏர் சேகரித்த தரவுகளின்படி, திங்கள்கிழமை, பிரேசிலிலுள்ள 2.10 கோடி மக்கள் வசிக்கும் சா பாவ்லோ மாநகரில் காற்று மிக மோசமாக மாசுபட்டிருந்தது (மோசமான காற்றில் முதலிடம் பெறுவது பாகிஸ்தானிலுள்ள கராச்சி).
பிரேசிலின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான சபாடா டோ வேடிரோஸ் தேசிய பூங்கா பகுதிகளில் காட்டுத் தீ பற்றியெரிந்துகொண்டிருக்கிறது.
வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு முன்னதாகவே கோடைக் காலம் தொடங்கிவிட்டது. பலமான காற்று வீசுகிறது. தவிர, புழுக்கமாகவும் வெப்பமாகவும் இருக்கிறது. இவையெல்லாமுமாகச் சேர்ந்து காட்டுத் தீ பரவுவதற்கு வசதியாகிவிட்டது.
இந்த வனப் பகுதியில் திங்கள்கிழமை நேரிட்ட தீயை இரு ஹெலிகாப்டர்களின் உதவியுடன் 80-க்கும் அதிகமான தீயணைப்பு வீர்ர்கள் இணைந்து கட்டுப்படுத்தினர். இந்தப் பூங்கா பகுதிகளுக்குள் விரைவில் இன்னமும் இரு தீப்பரவல்கள் ஊடுருவிவிடும் என அஞ்சப்படுகிறது.
இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து செப். 8 ஆம் தேதி வரையில் மட்டுமே நாடு முழுவதும் ஏறத்தாழ 1.60 லட்சம் தீப்பற்றிய சம்பவங்கள் நேர்ந்திருக்கின்றன. 2010-க்குப் பிறகு இதுவே மிக மோசமான காலகட்டம். உலகின் மிகப் பெரிய சதுப்பு நிலப் பகுதியான பேன்டனால் கடும் தீயினால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது முறை.
பெரும்பாலான தீச் சம்பவங்கள் மனிதர்களால் ஏற்படுபவையே. காடழிப்பு, விவசாய நிலங்களில் கழிவுகளை எரிப்பதன் காரணமாகவே பெருந்தீ பரவுகிறது. இந்த ஆண்டு மட்டுமே பிரேசிலில் இத்தாலி நாட்டின் பரப்பளவுக்கு இணையான பகுதி தீயினால் எரிந்தழிந்துள்ளது.
காட்டுத் தீ மட்டுமே பிரச்சினை அல்ல. சபாடா டோ வேடிரோஸ் தேசிய பூங்காவிலிருந்து வடகிழக்கு வரை சுமார் 1900 கி.மீ. தொலைவுக்கும் அதிகமாக – பெருவெள்ளம் பாயக்கூடிய அமேசான் ஆற்றிலும் அதன் முதன்மையான துணை ஆறான மடீராவிலும் மிக மோசமான அளவுக்குத் தண்ணீர் குறைந்துவிட்டிருக்கிறது. அக்டோபர் மாதம் வரையிலும் குறிப்பிடத்தக்க மழையை கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாது.
தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாகப் பல நகர்ப்புற மக்கள் குடிதண்ணீருக்கே மிகவும் சிரமப்படத் தொடங்கிவிட்டனர். அசுத்தமான நீரைக் குடிப்பதால் நோய்கள் பரவுகின்றன. பயிர்கள் கருகிவிட்டதால் உணவுப் பற்றாக்குறையும் நிகழ்கிறது.
தண்ணீர் வற்றிப் போனதால் அமேசான் ஆற்றுப் பரப்பே மணல் பெருகிப் பாலையைப் போலக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது என்று பிரேசில் மக்கள் குறிப்பிடுகின்றனர்.