ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய சுனாமி மற்றும் பூகம்பத்தில் பலத்த சேதமடைந்துள்ள புகுஷிமா டாய்ச்சி அணு உலையில் இருந்து கதிரியக்க எரிபொருள் மாதிரியை சேகரிக்கும் பணியில் ரோபோட் ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9.0 ஆக பதிவாகியிருந்தது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி பேரலையும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த இயற்கை பேரிடரால் புகுஷிமா அணு உலையின் குளிரூட்டும் அமைப்புகள் முற்றிலும் செயலிழந்துவிட்டன. இதன் காரணமாக கடந்த 13 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் அணு உலை உள்ளே இருந்த கதிரியக்க எரிபொருள் உருகி, கழிவுகளுடன் கலந்து அணு உலை உள்ளெ படிந்துள்ளது.
நீண்டகாலம் அணு உலையின் உள்ளே கதிரியக்க எரிபொருள் படிந்து கிடப்பதால் சுற்றுச்சுழலுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடுமென்பதால் அணு உலையிலிருந்து கதிரியக்க எரிபொருளை மிகுந்த பாதுகாப்புடன் வெளியேற்றி அணு உலையை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஜப்பான் அணு சக்தி முகமை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக, சிறிய ரக ரோபோக்களை பயன்படுத்தி அணு உலை உள்ளே ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அணு உலையை பராமரிக்கும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி, அடுத்தகட்டமாக உருகிய நிலையில் உள்ள எரிபொருள் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ரோபோட் இயந்திரத்தை செவ்வாய்க்கிழமை(செப். 10) பயன்படுத்தியுள்ளது.
மொத்தம் 3 அணு உலைகளைக் கொண்ட புகுஷிமா டாய்ச்சி அணு உலை வளாகத்தில், கதிரியக்கம் சற்று குறைவாக வெளிப்படும் இரண்டாவது அணு உலையில் தற்போது ரோபோட் செலுத்தப்பட்டுள்ளது. சவால் நிறைந்த இந்த பணியில் 2 வார காலம் ரோபோட் ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தொடங்கவிருந்த இந்த பணி தொழில்நுட்பக் கோளாறுகளால் தடைபட்டது. ரோபோட்டை அணு உலையின் உள்ளே செலுத்துவதற்கு ஏதுவாக 5 அடி நீளமுள்ள குழாய்கள் பொருத்தும் பணிகளில் தவறு ஏற்பட்டதன் விளைவாக இந்த முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டது.
மனிதர்கள் செல்ல முடியாத அணு உலையின் கதிரியக்கம் நிறைந்த ஆபத்தான உள்பகுதிகளுக்கு இந்த ரோபோட் பயணிக்கும். ‘டெலெஸ்கோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோட், 72 அடி நீளத்துக்கு விரியும் தன்மை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, எளிதாக அணு உலையின் உள்பகுதியில் தேங்கியுள்ள எரிபொருள் கழிவுகளை செகரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 880 டன் கதிரியக்க உருகிய எரிபொருள் மேற்கண்ட 3 அணு உலைகளிலும் தேங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், வெறும் 3 கிராம் அளவுக்கு எரிபொருள் மாதிரியை எடுப்பதற்காகத்தான் இந்த பெரும் போராட்டம்!
இந்த எரிபொருள் மாதிரிய ஆய்வு செய்து அணு உலை உள்ளே கழிவுகள் எந்த நிலையில் என்பதை கண்டறிய முடியுமென அறிவியல் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த அணு உலையை சுத்தப்படுத்தும் பணிகள் தோராயமாக 30 முதல் 40 அண்டுகள், அல்லது அதற்கும் மேல் ஆகலாம் எனக் கணக்கிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
கதிரியக்கம் வெளிப்படும் பகுதிக்குள் ரோபோட் அனுப்பப்பட்டுள்ளதால் அணு உலையில் சற்று தூரமான பகுதியிலிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் ரோபோட்டின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு நாளைக்கு சராசரியாக 2 மணி நேரம் மட்டுமே ரோபோட் இயக்கப்படும். ரோபோட் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் பணியில், 6 பணியாளர்கள் கொண்ட கொண்ட 8 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவினரும் சுமார் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மட்டுமே அணு உலையில் இருந்து ரோபோட் செயல்பாட்டை கண்காணிப்பர். கதிரியக்க பாதிப்பை தவிர்க்கவே, இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.
ரோபோட் சேகரிக்கும் எரிபொருள் மாதிரிகளில் இருந்து வெளியாகும் கதிரியக்கம் குறிப்பிட்ட அளவைக் கடந்து வெளியானால், அந்த எரிபொருளை ரோபோட் ஆய்வுக்காக எடுத்து வராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 1979-இல் ஏற்பட்ட பேரழிவின்போது சேதமடைந்த த்ரீ மைல் ஐலேண்ட் அணு உலையில், சுத்திகரிப்பு பணியில் அனுபவம் வாய்ந்த லேக் பாரட், தற்போது புகுஷிமா அணு உலையில் மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்புப் பணியில் ஆலோசகராக செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது.