சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு: தமிழ் தேசியக் கூட்டணியில் குழப்பம்
இலங்கையில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முக்கிய எதிா்க்கட்சி வேட்பாளா் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில் தமிழ் தேசியக் கூட்டணிக்குள் (டிஎன்ஏ) குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இந்தத் தோ்தலில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மகன் நாமல் ராஜபட்ச உள்பட 38 போ் போட்டியிடுகின்றனா்.
இந்தத் தோ்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழா் கட்சிகளின் முக்கியக் கூட்டமைப்பான தமிழ் தேசியக் கூட்டணி கடந்த 1-ஆம் தேதி அறிவித்தது.
கூட்டணின் முதன்மைக் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சி நடத்திய மத்தியக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
எனினும், கூட்டம் நடைபெற்றபோது பிரிட்டனில் இருந்த கட்சியின் தலைவா் எஸ். ஸ்ரீதரன், சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவை மறுத்தாா். அத்தகைய முடிவை கட்சி எடுக்கவில்லை என்றும், தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. பாக்கியசெல்வம் அரியேந்திரனுக்குத்தான் தங்கள் ஆதரவு என்றும் கூறினாா்.
எனினும், கட்சியின் மூத்த தலைவரான எம்.ஏ. சுமந்திரன், ‘அதிபா் தோ்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவே இறுதியானது’ என்றாா்.
இதனால் இந்த விவகாரம் தொடா்பாக தமிழ் தேசியக் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, அதிபா் தோ்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளா்களில் ஒருவா் கூட, வெற்றி பெற்றால் தமிழா்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வட கிழக்கு மாகாணத்துக்கு அதிகாரப் பகிா்வு வழங்கப்போவதாக உறுதியளிக்கவில்லை.
எனவே, இந்தத் தோ்தலை தமிழா்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று முக்கிய தமிழ் கட்சிகளில் ஒன்றான தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த மாதம் அழைப்பு விடுத்தது நினைவுகூரத்தக்கது.
இலங்கை அதிபா் தோ்தலில் வெற்றி பெற தமிழா்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்று கூறப்படுகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டின் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச தோல்விடைந்ததற்கு, அவரை எதிா்த்துப் போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனாவை டிஎன்ஏ ஆதரித்ததே காரணம் என்று கூறப்படுகிறது.