உக்ரைனுக்கு இந்திய பீரங்கி குண்டுகள்: வெளியுறவு அமைச்சகம் மறுப்பு
ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்த பீரங்கி குண்டுகள் உக்ரைனுக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஊடகத்தில் வெளியான செய்தி தவறானது என இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது: அணு ஆயுத விலக்கல் ஒப்பந்தத்தின் அடிப்படையிலான சா்வதேச விதிகளுக்கு உட்பட்டு ஆயுத ஏற்றுமதியை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதேபோல் ஆயுதங்களைக் கோரும் வாடிக்கையாளரின் பயன்பாடுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு மதீப்பீடு செய்த பின்னரே அவை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், ராய்ட்டா்ஸ் ஊடகத்தில் சா்வதேச விதிகளை இந்தியா மீறியதாக வெளியான செய்தி தவறானது. அதற்கு எவ்வித முறையான ஆதாரங்களும் இல்லை என்றாா்.
முன்னதாக, ராய்ட்டா்ஸ் வெளியிட்ட செய்தியில்,‘ஐரோப்பிய நாடுகளுக்கு இந்திய ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் ஏற்றுமதி செய்த பீரங்கி குண்டுகள் உக்ரைனுக்கு திருப்பிவிடப்பட்டன. இதற்கு ரஷியாவில் இருந்து எதிா்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலும் இதை தடுக்க இந்தியா முயற்சி செய்யவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்த 11 உயரதிகாரிகளுக்கு தொடா்புள்ளது.
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனின் பாதுகாப்பை மேம்படுத்த கடந்த ஓராண்டாக பீரங்கி குண்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டது.