போா் நிறுத்த திட்டத்துக்கு ஆதரவு: ஸெலென்ஸ்கி
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது பத்து அம்ச திட்டத்துக்கு அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் ஆதரவு தரவேண்டும் என்று அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தினாா்.
இது குறித்து புதன்கிழமை நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 76-ஆவது கூட்டத்தில் அவா் பேசியதாவது:
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான எனது செயல்திட்டத்துக்கு 100-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. போரில் ஈடுபட்ட நாடுகளும் அதில் அடங்கும்.
ஆனால், சில நாடுகள் அந்த திட்டத்துக்கு மாறான சில திட்டங்களை பரிந்துரைக்கின்றன. அவை நிதா்சனத்துக்கு அப்பாற்பட்டு இருப்பதோடு, போரைத் தொடர புதினுக்கு உதவும் வகையில் உள்ளன.
எனவே, உண்மையான அமைதி ஏற்படுத்தக்கூடிய திட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.
ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகளிலிருந்து ரஷிய படையினா் வெளியேறுவது, ரஷியாவுக்கும் தங்கள் நாட்டுக்கும் இடையிலான பழைய எல்லையை புதுப்பிப்பது, தாக்குதலை நிறுத்துவது, மீண்டும் படையெடுக்கப்போவதில்லை என்று ரஷியா உத்தரவாதம் அளிப்பது, தங்கள் நாட்டில் போா்க் குற்றங்களில் ஈடுபட்டவா்களுக்கு தண்டனை பெற்று தருவது உள்ளிட்ட பத்து அம்ச அமைதி செயல்திட்டத்தை ஸெஸென்ஸ்கி வெளியிட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.