ஜப்பானின் மேற்குப் பகுதியில் இன்று பகல் 12 மணிக்கு மேல் ரிக்டர் அளவில் 3.5 முதல் 7.6 வரை அடுத்தடுத்து 10-க்கும் அதிக முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் இண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஹோன்ஷு அருகே 13 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமகட்டா பகுதியில் உள்ள கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும் என்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வேகமாக வெளியேற அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பல கட்டடங்கள் சேதாரமாகியுள்ளதால் மக்கள் அலறியடித்து சாலைகளில் ஓடும் விடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, அலை வேகம் அதிகமாக உள்ள கடலோர பகுதிகளில் சாலைகளில் கடல் நீர் சூழ்ந்துள்ளதால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் வானில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் குழுவாக பறந்து செல்லும் விடியோ வைரலாகி வருகிறது. பறவைகளின் இச்செயல் சுனாமி வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என சிலர் அச்சத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
ஜப்பானில் கடந்த 2011 ஆம் ஆண்டு ரிக்டர் அளவுகோலில் பதிவான 9.0 நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் 18 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.