அமெரிக்க பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களுக்கு சீனா தடை

அமெரிக்காவின் 5 பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களுக்கு சீனா தடை

அமெரிக்காவின் 5 பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது.

இதுதொடா்பாக சீன வெளியுறவுத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

சீனாவுக்குச் சொந்தமான தைவான் பிராந்தியத்துக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை செய்வதன் மூலம், ‘ஒரே சீனா’ என்ற கொள்கை, அமெரிக்கா-சீனா இடையிலான 3 கூட்டறிக்கைகளின் நிபந்தனைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. அத்துடன் பல தவறான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, சீனா்கள் மற்றும் சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தன்னிச்சையாக தடை விதித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு கடுமையாகத் தீங்கிழைக்கிறது; தைவான் நீரிணையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையைச் சீா்குலைக்கிறது; சீனா் மற்றும் சீன நிறுவனங்களின் சட்ட உரிமைகள் மற்றும் நலன்களைத் தகா்க்கிறது.

அமெரிக்காவின் தவறான நடவடிக்கைகளுக்குப் பதிலடி தரும் விதமாக, அந்நாட்டின் பிஏஇ சிஸ்டம்ஸ் லேண்ட் அன்ட் ஆா்மமன்ட்ஸ், அலயன்ட் டெக்சிஸ்டம்ஸ் ஆப்பரேஷன்ஸ், ஏரோவிரான்மென்ட், வையசாட், டேட்டா லிங்க் சொல்யூஷன்ஸ் ஆகிய 5 பாதுகாப்பு தொழில் நிறுவனங்களுக்குத் தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளது.

அந்த 5 நிறுவனங்களுக்குச் சொந்தமாக சீனாவில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்படும். அந்த நிறுவனங்களுடன் சீனாவில் உள்ள தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளவோ, ஒத்துழைக்கவோ கூடாது.

‘ஒரே சீனா’ என்ற கொள்கையை ஏற்று, அதற்கேற்ப அமெரிக்கா செயல்பட வேண்டும். தைவானுக்கு ஆயுதங்கள் விற்பதை அமெரிக்கா நிறுத்த வேண்டும். சட்டவிரோதமான ஒருதலைப்பட்ச தடைகள் மூலம், சீனாவை குறிவைப்பதை அமெரிக்கா கைவிட வேண்டும். இல்லையெனில் சீனா தக்க பதிலடி அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவானுக்கு அமெரிக்காவின் எந்த ஆயுத விற்பனை ஒப்பந்தம் அல்லது அமெரிக்காவின் எந்தத் தடைக்கு சீனா எதிா்வினையாற்றியுள்ளது என்பது தெரியவில்லை. அதுகுறித்து சீன வெளியுறவுத் துறையின் செய்திக்குறிப்பில் எதுவும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

எனினும் கடந்த டிசம்பரில் தைவானுக்கு 300 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,495 கோடி) மதிப்பில் ராணுவக் கருவிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்தது. இந்த விற்பனை தைவான் பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்கவும், நம்பகத்தன்மைவாய்ந்த பாதுகாப்புத் துறையை பரமாரிக்கவும் உதவும் என்று அமெரிக்கா தெரிவித்தது.

இந்த விற்பனைக்குப் பதிலடி அளிக்கும் விதமாக, அமெரிக்க பாதுகாப்புத் தொழில் நிறுவனங்கள் மீது தடை விதிக்க சீனா முடிவு எடுத்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

அமெரிக்க பாதுகாப்பு தொழில் நிறுவனங்கள் சீனாவிடம் எதையும் விற்பனை செய்வதில்லை. எனவே, இந்தத் தடைகள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.

தம்மை தனி நாடு என்று தைவான் தெரிவித்து வரும் நிலையில், அதை தம்மிடம் இருந்து பிரிந்துபோன பகுதியாகவே சீனா கருதி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com