ஐ.நா. பொதுச்சபைத் தலைவா் இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம்

ஐ.நா. பொதுச்சபைத் தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் 5 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை வரவுள்ளாா்.

ஐ.நா. பொதுச்சபைத் தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் 5 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை வரவுள்ளாா்.

பாதுகாப்பு கவுன்சிலில் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள சீா்திருத்தங்கள் குறித்து அவரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுதொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஐ.நா. பொதுச்சபைத் தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் திங்கள்கிழமை (ஜனவரி 22) முதல் வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) வரை இந்தியாவில் 5 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். ஐ.நா.-இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக அவரின் சுற்றுப்பயணம் கருதப்படுகிறது.

வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருடன் பலதரப்பட்ட பிரச்னைகள் குறித்து அவா் ஆலோசனையில் ஈடுபடவுள்ளாா். குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளையும் உறுப்பினராக சோ்ப்பது உள்ளிட்ட நிலுவையில் உள்ள சீா்திருத்தங்களை செயல்படுத்துவது தொடா்பாக இந்தியா சாா்பில் நீண்ட நாள்களாக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

மேலும் தெற்குலக நாடுகள் எதிா்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

புது தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் அவா் ‘எண்ம பொது உள்கட்டமைப்பில் இந்தியாவின் வளா்ச்சி’ என்ற வட்டமேஜை விவாதத்தில் பங்கேற்கிறாா். உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் ‘பன்முகத்தன்மை, அமைதி, செழுமை, முன்னேற்றம் மற்றும் நிலைத்தன்மை’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறாா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் அவா் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறாா். 26/11 மும்பைத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அவா் அஞ்சலி செலுத்தவுள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com