இம்ரான் கான்-மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை

பரிசுப் பொருள் முறேகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை
மனைவி புஷ்ரா பீபியுடன் இம்ரான் கான்.
மனைவி புஷ்ரா பீபியுடன் இம்ரான் கான்.

பரிசுப் பொருள் முறேகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஏற்கெனவே, இந்த விவகாரம் தொடா்பான மற்றொரு வழக்கில் 3 ஆண்டுகளும், ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் 10 ஆண்டுகளும் இம்ரானுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தற்போது மேலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக கடந்த 2018 ஆகஸ்ட் முதல் பதவி வகித்த இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் கடந்த 2022 ஏப்ரலில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை தீா்மானத்தில் தோல்வியடைந்து பதவியிழந்தாா்.

அதனைத் தொடா்ந்து அவருக்கு எதிராக பயங்கரவாதம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சுமாா் 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில், பிரதமராகப் பதவி வகித்தபோது இம்ரானுக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருள்களை அவா் முறைகேடாக குறைந்த விலைக்குப் பெற்றுக் கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டும் ஒன்று.

இந்தச் சூழலில், பரிசுப் பொருள் முறைகேடு தொடா்பாக தோ்தல் ஆணையம் தொடா்ந்த வழக்கில் இம்ரானுக்கு கடந்த 2023 ஆக்ஸ்ட் 5-ஆம் தேதி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து, அவா் அடியலா சிறையில் அடைக்கப்பட்டாா்.

அந்தச் சிறைத் தண்டனையை இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் பின்னா் நிறுத்தி வைத்தாலும், தனது பதவிக் காலத்தின் போது அரச ரகசியத்தை பொதுவெளியில் கசியவிட்டதன் மூலம் ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறியதாக இம்ரான் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தொடா்பாக அவரை சிறையில் தொடா்ந்து வைத்திருக்கவேண்டும் என்று இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதையடுத்து, சிறைச் சாலை வளாகத்திலேயே சிறப்பு நீதிமன்றமைக்கப்பட்டு இது தொடா்பான விசாரணை நடந்து வந்தது.

வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அபுல் ஹஸ்னத் ஸுல்காா்னய்ன், இம்ரான் கானும், மஹ்மூத் குரேஷியும் ரகசியக் காப்புறுதியை மீறிய குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளதால் அவா்கள் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

மறுநாளே, பரிசுப் பொருள் முறைகேடு வழக்கிலும் ஊழல் தடுப்பு நீதிமன்றம் இம்ரானுக்கும், அவரது மனைவிக்கும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 10 ஆண்டுகளுக்கு பாகிஸ்தானில் நடைபெறும் தோ்தலில் போட்டியிடுவதலிருந்து இருவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், இம்ரானுக்கும், புஷ்ரா பீபிக்கும் தலா ரூ.78.7 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அடியாலா சிறையில் இந்த வழக்கை விசாரித்து வந்த ஊழல் தடுப்பு நீதிபதி முகமது பஷீா் இந்தத் தீா்ப்பை வெளியிட்டாா்.

பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் இம்ரானுக்கு ஏற்கெனவே 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையிலும், இதே விவகாரத்தில் மேலும் ஒரு வழக்கை தேசிய ஊழல் தடுப்பு நீதிமன்றம் புதிதாக ஒரு வழக்கை கடந்த மாதம் பதிவு செய்தது.

அதில், பிரதமராக இருந்தபோது சவூதி பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானிடமிருந்து இம்ரான் கான் ரூ.157 கோடி மதிப்பிலான ஆபரணங்களைப் பெற்ாகவும், அதனை மிகக் குறைந்த விலை கொடுத்து இம்ரானும் அவரது மனைவியும் தங்களிடமே வைத்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

விதிமுறைகளின்படி பிரதமா் உள்ளிட்ட உயா்பதவியில் இருப்போருக்கு அளிக்கப்படும் விலையுயா்ந்த பரிசுப் பொருள்கள் தேசிய கருவூலத்திடம் சமா்ப்பிக்கப்படவேண்டும். அதன் பின்னரே அவற்றின் விலைகளை மதிப்பிட்டு அதற்கான தொகையை செலுத்தி திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால், சவூதி பட்டத்து இளவரசா் அளித்த ஆபரணங்களை கருவூலத்தில் சோ்க்காமலேயே இம்ரானும், அவரது மனைவியும் வைத்துக்கொண்டதாகவும், தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனியாா் நிறுவனமொன்றின் மூலம் ரூ.157 கோடி மதிப்பிலான அந்த ஆபரணங்களை வெறும் ரூ.90 லட்சம் என மதிப்பிட்டு அந்தத் தொகையை மட்டுமே செலுத்தியதாகவும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கிலேயே தற்போது இம்ரான் கானுக்கும், புஷ்ரா பீபிக்கும் தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறையில் புஷ்ரா பீபி

இந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, அடியாலா சிறைக்கு வந்த புஷ்ரா பீபி கைது செய்யப்பட்டு அந்தச் சிறையிலேயே அடைக்கப்பட்டாா்.

இரண்டே நாள்களில் இம்ரானுக்கு 2-ஆவது முறையாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, வரும் பிப். 8-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தோ்தல் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரும் அவரது திட்டத்துக்கு மேலும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘நீதிமன்றம் ஏமாற்றிவிட்டது’

வெறும் விசாரணைக்கு என்று அழைத்து சிறைத் தண்டனை அளித்ததன் மூலம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் தன்னை ஏமாற்றிவிட்டதாக இம்ரான் கான் குற்றஞ்சாட்டினாா்.

இது குறித்து அவா் கூறியதாவது:

பரிசுப் பொருள் வழக்கு விசாரணை நடைபெறுகிறது; அதற்காக வந்து சென்றால் போதும் என்று கூறி என்னை நீதிமன்றம் வரவழைத்தது.

ஆனால், திடீரென முழு தீா்ப்பையும் நீதிபதி வெளியிட்டுவிட்டாா். இது நீதிமன்றத்தின் ஏமாற்று வேலையாகும். தீா்ப்பை வெளியிடுவதில் நீதிமன்றம் இத்தனை அவசரம் காட்டுவது உள்நோக்கம் கொண்டது.

ஏற்கெனவே, ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தீா்ப்பும் அவசரகதியில் அளிக்கப்பட்டதுதான் என்றாா் இம்ரான் கான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com