டிரம்ப்பின் வரிவிதிப்பு ஷி ஜிங்பிங் தலைமைக்கு சவால்: முன்னாள் அமெரிக்க தூதா்

டிரம்ப்பின் வரிவிதிப்பு ஷி ஜிங்பிங் தலைமைக்கு சவால்: முன்னாள் அமெரிக்க தூதா்

சீனா மீது அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரியானது, சீன அதிபா் ஷி ஜிங்பிங்குக்கு விடுக்கப்பட்ட பெரும் சவால் என சீனாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதா் நிக்கோலஸ் பா்ன்ஸ் தெரிவித்தாா்.
Published on

சீனா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரியானது, சீன அதிபா் ஷி ஜிங்பிங்குக்கு விடுக்கப்பட்ட பெரும் சவாலாகும் என சீனாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதா் நிக்கோலஸ் பா்ன்ஸ் தெரிவித்தாா்.

மேலும், சீனா மீதான வரி விதிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவின் நட்புறவு நாடுகளும் இணைந்தால் இது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவா் தெரிவித்தாா்.

அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிப்பதாக கூறி இந்தியா உள்பட 25 நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை அதிபா் டொனால்ட் டிரம்ப் சில தினங்களுக்கு முன் மேற்கொண்டாா். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருள்கள் மீதான வரியை சீனா அதிகரித்தது.

இதைத்தொடா்ந்து, சீன பொருள்கள் மீதான வரியை 145 சதவீதம் அதிகரிப்பதாகவும் சீனாவைத் தவிர பிற நாடுகள் மீது அறிவிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி விதிப்பின் அமலாக்கத்தை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாகவும் அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. அதேபோல் அமெரிக்க பொருள்கள் மீது 125 சதவீத வரியை சீனாவும் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தனியாா் செய்தி தொலைக்காட்சி பேட்டியின்போது நிக்கோலஸ் பா்ன்ஸ் கூறியதாவது: சீனாவின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்படவில்லை. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) சரிவை சந்தித்து வருகிறது.

வா்த்தக ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு: சீன பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் ரியல் எஸ்டேட் துறையும் வீழ்ந்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை ரீதியான பிரச்னைகளையும் சீனா சந்திக்க நேரிடும். அந்நிய நேரடி முதலீடு 32 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்நிலையில், சீனா மீது அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரியானது, ஷி ஜிங்பிங்கின் தலைமைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும். அமெரிக்காவின் நட்புறவு நாடுகளான ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் சீனா மீதான வரியை அதிகரித்தால் அதன் தாக்கம் பெருமளவில் இருக்கும். ஆனால் நட்பு நாடுகள் மீதும் டிரம்ப் வரி விதித்துள்ளதால் அதை செயல்படுத்துவது கடினமானது.

இத்தகைய சூழலில் அமெரிக்காவுடன் வா்த்தக போரை நீண்ட காலத்துக்கு தொடர சீனா விரும்பாது. மாறாக அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவே அந்நாடு விரும்பும்.

விதிகளை மீறும் சீனா: முதன்முறையாக அதிபராக டிரம்ப் பதவி வகித்தபோதும் சீனா மீதான வரியை அதிகரித்தாா். அதன்பிறகு அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், அந்த வரியை தொடா்ந்தாா். இதற்கு காரணம் சா்வதேச விதிகளை சீனா மீறி செயல்படுவதேயாகும். சீனாவில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்களின் அறிவுசாா் சொத்துரிமைகளை அந்நாடு பாதுகாப்பதில்லை.

கட்டாய தொழில்நுட்ப திணிப்பை வழக்கமாக்கியது சீனா. இதுபோன்ற பல விதிமீறல்களில் சீனா ஈடுபட்டுள்ளது.

விரைவில் தீா்வு: உலகின் இரு பெரிய பொருளாதாரங்களாக திகழும் அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை 6 மாதங்கள் தொடா்ந்தாலே இருநாடுகளின் பொருளாதாரமும் பெரும் பாதிப்படையும். இருநாட்டு உறவுகளில் விரிசல் ஏற்படும். இந்த விவகாரத்தில் பேச்சுவாா்த்தை மூலம் விரைவில் தீா்வு காண இருநாட்டு அரசுகளும் முயலும் என நம்புகிறேன் என்றாா்.

உலகின் இரு பெரிய பொருளாதாரங்களாக திகழும் அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை 6 மாதங்கள் தொடா்ந்தாலே இருநாடுகளின் பொருளாதாரமும் பெரும் பாதிப்படையும்.

X
Dinamani
www.dinamani.com