
விண்வெளி ஆராய்ச்சிக்காக அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் தொடங்கியுள்ள ‘ப்ளூ ஆரிஜின்’ நிறுவனத்திற்கு சொந்தமான ’நியூ ஷெப்பர்ட்’ ராக்கெட்டில் 6 பெண்கள் இணைந்த குழுவினர் திங்கள்கிழமை(ஏப். 14) விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்களில் பாப் இசையில் உலகப் புகழ் பெற்ற பாடகி கேட்டி பெர்ரியும் ஒருவராக இணைந்துள்ளார்.
இந்த குழுவில், அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸுடன் விரைவில் திருமண உறவில் இணையவுள்ள அமெரிக்க பத்திரிகையாளர் ‘லாரன் சான்செஸும்’ விண்வெளிக்கு செல்கிறார் என்பது சுவாரசிய தகவலாகும்.
மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்வதற்காக ‘ப்ளூ ஆரிஜின்’ நிறுவனம் ’நியூ ஷெப்பர்ட்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்கீழ், விண்வெளிக்கு செல்லும் 11-ஆவது குழுவினராக பாடகி கேட்டி பெர்ரியுடனான மேற்கண்ட பெண்கள் குழு இன்று விண்வெளிக்கு செல்கின்றனர்.
இந்த குழுவில் இருப்போர்:
சிபிஎஸ் நிறுவன பத்திரிகையாளர் கெய்ல் கிங்
விண்வெளி துறை சார் பொறியாளர் ஐஷா பௌ
சமூக உரிமைகள் செயல்பாட்டாளர் அமன்தா குயென்
திரைப்படத் தயாரிப்பாளர் கேரியேன் ஃப்ளின்
அமெரிக்க பத்திரிகையாளர் லாரன் சான்செஸ்
பாடகி கேட்டி பெர்ரி
ராக்கெட் ஏவப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன், அதாவது இன்றிரவு 7 மணிக்கு ராக்கெட் ஏவுதளத்துக்கான கவுன்ட்டவுன் நேரம் ஆரம்பமாகிறது. 1963-ஆம் ஆண்டுக்கு பின் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இணைந்து விண்வெளிக்கு ராக்கெட்டில் அனுப்பப்படுகின்றனர். இதன்காரணமாக, இந்த ராக்கெட் பயணம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சுமார் 11 நிமிடங்கள் வரை இந்த ராக்கெட் பூமிக்கு அப்பால் விண்வெளியில் உலா வரும், அதனைத்தொடர்ந்து, பூமிக்கு பத்திரமாக வந்திறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த 6 பெண்களுக்கும் முறையான பயிற்சியளிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.