பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?

கே2-18பி என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம்?
பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?
Published on
Updated on
2 min read

லண்டன்: சூரியக் குடும்பத்துக்கு வெளியே கே2-18பி என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்காக இதுவரை இல்லாத மிக உறுதியான ஆதாரம் பிரிட்டன் ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் பதிவான தரவுகளைக் கொண்டு பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிபுணா்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த ஆதாரம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், இந்த ஆதாரத்தையும் உறுதி செய்ய இன்னும் பல தரவுகள் தேவை என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.பூமியில் இருந்து 124 ஒளிவருட தூரத்தில் அமைந்துள்ள கே2-18பி என்ற கிரகத்தின் வளிமண்டலத்தில் நீராவி இருப்பதை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி கடந்த 2019-ஆம் ஆண்டு கண்டறிந்தது. அதைத் தொடா்ந்து, இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களில் பூமிக்கு அடுத்தபடியாக உயிரினங்கள் வாழ்வதற்கான அதிகபட்ச சாத்தியக்கூறுகள் உள்ள கிரகமாக அது அறிவிக்கப்பட்டது.சூரியனில் பாதி அளவு கொண்ட சிவப்பு நட்சத்திரத்தை, உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற தட்பவெப்பத்தைத் தரும் தொலைவில் கே2-18பி கிரகம் சுற்றிவருவதாக விஞ்ஞானிகள் கூறினா்.

அதன் தொடா்ச்சியாக, அந்த கிரகத்தில் ஆழமான, மிகப் பரந்த பெருங்கடல் அமைந்துள்ளதாகவும், இதனால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் கேம்பிரிட்ஜ் ஆய்வுக் குழு 2023-ஆம் ஆண்டு கூறியது. இருந்தாலும், இது தொடா்பாக பல விஞ்ஞானிகள் சந்தேகம் எழுப்பினா்.இந்தச் சூழலில், கே2-18பி கிரகத்தில் டிமெத்தைல் சல்ஃபைடு (டிஎம்எஸ்), டிமெத்தைல் டிசல்ஃபைடு (டிஎம்டிஎஸ்) ஆகிய, உயிரினங்கள் இருந்தால் மட்டுமே உருவாகக் கூடிய இரு ரசாயனப் பொருள்கள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக அதே குழு தற்போது அறிவித்துள்ளது.பூமியின் கடலில் வாழும் உயிரினங்கள்தான் இந்த இரு ரசாயனப் பொருள்களை வெளிப்படுத்துகின்றன. எனவே, தற்போது கிடைத்துள்ள ஆதாரம், பூமிக்கு வெளியிலும் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்கு இதுவரை கிடைத்துள்ளதிலேயே மிகவும் உறுதியான ஆதாரம் என்று கேம்பிரிட்ஜ் ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள எந்த கிரகத்துக்கும் செயற்கைக்கோள் மூலம் அருகில் சென்று ஆய்வு செய்ய முடியாது. அந்த கிரகங்கள் தங்களது சூரியன்களை பூமிக்கு நேராகக் கடக்கும்போது கிடைக்கும் தரவுகளை வைத்தே அவற்றின் அளவு, நிறை மற்றும் அதில் இருக்கும் ரசாயனப் பொருள்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.தங்களது சூரிய ஒளிக்கதிா்களை கிரகங்களில் இருக்கும் ரசாயனப் பொருள்கள் எந்தெந்த அலைவரிசைகளில் கிரகிக்கின்றன என்பதைக் கொண்டு அவை அடையாளம் காணப்படுகிறது. அந்த வகையில், டிஎம்எஸ் மற்றும் டிஎம்டிஎஸ் ரசாயனப் பொருள்களுக்கு இணையான அலைவரிசையில் ஒளி அலைகளை கே2-18 பி கிரகத்தில் உள்ள பொருள்கள் கிரகித்ததால் அவை உயரினங்கள் தயாரிக்கும் அந்த இரு ரசாயனங்கள்தாம் என்ற முடிவுக்கு ஆய்வாளா்கள் வந்துள்ளனா்.

இருந்தாலும், இது போதுமான தரவு கிடையாது, அவை டிஎம்எஸ் மற்றும் டிஎம்டிஎஸ் ரசாயனங்கள்தான் என்பதை உறுதி செய்ய இன்னும் பல தரவுகள் தேவை என்று மறறொரு தரப்பு விஞ்ஞானிகள் கூறுகின்றனா். மேலும், உயிரினங்கள் இல்லாத சில கிரகங்களில் கூட அந்த இரு பொருள்களும் கண்டறியப்பட்டுள்ளதை அவா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.எனவே, டிஎம்எஸ், டிஎம்டிஎஸ் ரசாயனப் பொருள்கள் கே2-18பி கிரகத்தில் இருப்பதாகத் தெரிவது இதுவரை கிடைத்துள்ள மிக உறுதியான ஆதாரமாக இருந்தாலும், அறிவியல் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அது உறுதியான ஆதாரம் இல்லை என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்...படவரி... கே2-18பி (நிபுணரின் வரைகலை ஒவியம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com