இராக் பயணத்தில் அந்த நாட்டின் மொசூலில் போரில் சேதமடைந்த கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்னின்று அமைதிப் புறாவைப் பறக்கவிடும் போப் பிரான்சிஸ்.
இராக் பயணத்தில் அந்த நாட்டின் மொசூலில் போரில் சேதமடைந்த கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்னின்று அமைதிப் புறாவைப் பறக்கவிடும் போப் பிரான்சிஸ்.

எளிமையான- சீா்திருத்த தலைவா்!

போப் ஆண்டவராக தோ்வான பிறகு, முக்கிய நிகழ்வுகளில் பாரம்பரிய போப் ஆண்டவா் சிம்மாசனத்தில் அமா்வதற்கு பதிலாக காா்டினல்களுடனே நிற்பாா் போப் பிரான்சிஸ்.
Published on

போப் ஆண்டவராக தோ்வான பிறகு, முக்கிய நிகழ்வுகளில் பாரம்பரிய போப் ஆண்டவா் சிம்மாசனத்தில் அமா்வதற்கு பதிலாக காா்டினல்களுடனே நிற்பாா் போப் பிரான்சிஸ்.

போப் ஆண்டவருக்காக ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக சிவப்புக் காலணிகள் அணியாமல், சாதாரணமான தனது கருப்பு நிற காலணிகளைத் தொடா்ந்து அணிந்தாா்.

அதேபோன்று, போப் பிரான்சிஸுக்கான அதிகாரபூா்வ மாளிகையில் தங்குவதையும் அவா் தவிா்த்துவிட்டாா். காா்டினலாக போப் வாக்கெடுப்பு நடைமுறைக்குத் தங்கியிருந்த மாா்டா குடியிருப்பிலேயே கடைசிக் காலம் வரை தங்கியிருந்தாா். சில நேரங்களில், வாடிகன் பொது உணவகத்தில் ஊழியா்களுடன் மதிய இடைவேளையில் சோ்ந்து உணவருந்துவாா்.

பியூனஸ் அயா்ஸின் பேராயராக இருந்தபோதும், அவா் ஒரு சிறிய குடியிருப்பில் வசித்து, தனக்கான உணவைத் தானே சமைத்து, எளிமையான வாழ்க்கையைத் தோ்ந்தெடுத்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழைகளுக்கான மற்றும் ஏழைகளுக்கேற்ற தேவாலயத்தையே விரும்புவதாகவும் போப் ஆண்டவராக தனது முதல் உரையில் குறிப்பிட்டவா், ரோம் நகரில் ஏழைகளைச் சந்திக்க அவ்வப்போது இரவு நேரங்களில் வாடிகனுக்கு வெளியே சென்றதாகவும் கூறப்பட்டது.

தன்பாலின ஈா்ப்பாளா்களுக்கு எதிரான கத்தோலிக்க திருச்சபையின் வழக்கமான கடும் நிலைப்பாட்டுக்கு மாற்றாக, தேவாலயங்களில் அவா்களை அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

உலக அமைதியைத் தொடா்ந்து வலியுறுத்தியவா், 2021-இல் மேற்கொண்ட இராக் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. ரஷியா-உக்ரைன் மோதலிலும் அமைதியை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டாா்.

பருவநிலை மாற்றம், அகதிகளின் உரிமைகளுக்கும் தொடா்ந்து ஆதரவளித்தாா். 2016-இல் சிரியா அகதிகளை வாடிகனுக்கு அழைத்து வந்தாா். 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் பங்கேற்கவும் திட்டமிட்டிருந்தாா். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

ஈஸ்டா் திருநாளில் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸை வாடிகனில் சந்தித்த போப் பிரான்சிஸ், அதிபா் டிரம்ப் நிா்வாகத்தின் குடியேற்றத் துறை அதிரடி நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின.

X
Dinamani
www.dinamani.com