புதிய போப் யார்? மே 7 கார்டினல்கள் குழு கூடுகிறது!

மே 7 கத்தோலிக்க திருச்சபையின் கான்க்ளேவ் கூடுகிறது....
புதிய போப் யார்? மே 7  கார்டினல்கள் குழு கூடுகிறது!
AP
Published on
Updated on
1 min read

ரோம்: புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஆலோசனைக் கூட்டமும் வாக்கெடுப்பும் மே 7-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்.21 ஆம் தேதி காலமானார். போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு ஏப். 26 ஆம் தேதி புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற பின்னர் அவரது விருப்பப்படி புனித மேரி தேவாலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஆலோசனைக் கூட்டமும் வாக்கெடுப்பும் மே 7-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

வாடிகன் நகரில் அமைந்துள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் ஆலோசனை கூட்டமும், ரகசிய வாக்கெடுப்பும் நடைபெறும். இதற்கான பணிகளுக்காக சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் பணியாளர்கள் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியிருப்பதால், திங்கள்கிழமைமுதல் அங்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலுமிருந்து கத்தோலிக்க திருச்சபையில் போப்பை தேர்ந்தெடுப்பதற்கான பிரதிநிதித்துவம் பெற்ற காா்டினல்கள் (கத்தோலிக்க மத குருக்கள் - சிவப்பு நிற தொப்பியணிந்த கிறிஸ்தவ மத குருமாா்கள்) மற்றும் மறைந்த போப் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் உள்பட மொத்தம் 135 பேர் சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் மே மாதம் ஒன்றுகூடி, தனி அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவர். அப்போது வெளியாட்கள் யாரும் உள்ளே செல்லாத வகையில் தேவாலய கதவுகள் மூடப்பட்டுவிடும், தொடர்ந்து ரகசிய காப்பு பிரமாணத்தை அவர்கள் எடுத்துக்கொள்வர். அதன்பின் அடுத்தக்கட்டமாக நடைபெறும் வாக்கெடுப்பில் பங்கேற்பர்.

புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான கால வரம்பு இல்லையெனினும் இந்த பணிகள் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவாலயத்தில் இணைக்கப்பட்டுள்ள புகைக்கூண்டில் புகையை வெளியேற்றி முடிவுகள் அறிவிக்கப்படும். கரும்புகை வெளியானால், புதிய போப் இன்னும் தோ்வாகவில்லை என்றும் வெள்ளை புகை வெளியானால், புதிய போப் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா் என்றும் பொருளாகும்.

புதிய போப்-ஐ தேர்ந்தெடுக்க தகுதிப் பெற்ற 135 கார்டினல்களில் கோவா மாநிலத்தைச் சேர்ந்த பேராயர் ஃபிளிப்பே நெரி ஃபெர்ராரோ (வயது 72), ஹைதரபாத்தைச் சேர்ந்த கார்டினல் அந்தோனி பூலா (63), கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு (51) மற்றும் பசேலியோஸ் கிளேமிஸ் (65) ஆகிய 4 இந்திய கார்டினல்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com