பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் மக்கள் உணவு தேடி அலைவது பற்றிய நேரடி சித்திரம்...
gaza war
உணவு தேடி காஸா மக்கள்... AP
Published on
Updated on
3 min read

காஸாவில் போர் தொடந்து நீடித்து வருவதால் அங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் உணவுக்காகவும் உயிருக்காகவும் ஒவ்வொரு நாளும் போராடி வருவது உலகையே உலுக்கியுள்ளது.

பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டு மேலும் அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்ததில் இருந்து அங்கு போா் நடைபெற்று வருகிறது. இதில் 60,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர்.

மேலும், தற்போது காஸாவில் உணவு தேடி, உணவு மையங்களை நோக்கிச் செல்லும் குழந்தைகள் உள்பட அங்குள்ள மக்களை இஸ்ரேல் ராணுவத்தினர் இரக்கமின்றி சுட்டு வீழ்த்துகின்றனர். அங்குள்ள குழந்தைகள் உள்பட அனைவரும் பசியால் செத்துக்கொண்டிருக்கின்றனர்.

குடும்பத்தினருடன் அபீர்
குடும்பத்தினருடன் அபீர்AP

காஸாவில் உள்ள ஒவ்வொருவரும் காலை எழும்போது அவர்களுக்குள் எழும் ஒரு கேள்வி, இன்றைய உணவுக்கு என்ன செய்வது? இன்று உணவு கிடைக்குமா? என்பதுதான்.

உணவு தேடிச் செல்லும்போது உயிர்போகும் நிலை கூட ஏற்படலாம் என்ற பயத்திலும் இருக்கிறார்கள். அங்கு பசியின் கொடுமையால் இதுவரை 92 குழந்தைகள் உள்பட 162 பேர் இறந்திருக்கின்றனர்.

ஒருநாள் உணவுப் போராட்டம்

காஸா நகரத்திற்கு மேற்கே உள்ள கடலோர அகதிகள் முகாமில் வசித்துவரும் அபீர், அவரது மனைவி மற்றும் 6 குழந்தைகள் ஒருநாளை எப்படி கழிக்கிறார்கள்?

மற்றவர்களைப் போலவே அபீரும் அவரது குடும்பமும் காலை எழும்போது உணவுக்காக என்ன செய்யப் போகிறோம் என்றுதான் அந்த நாளைத் தொடங்குகின்றனர்.

அவர்களுக்கு 3 வழிகள் இருக்கின்றன. ஒன்று தொண்டு நிறுவனங்கள் வழங்கும் உணவுகள்... ஒரு பானை தண்ணீரும் பருப்பும் கிடைக்கும். கிடைக்காமலும் போகலாம்.

இரண்டாவது காஸாவிற்குள் வரும் உணவுப் பொருள்கள் அடங்கிய லாரிகளில் இருந்து மாவு உள்ளிட்ட பொருள்கள் கிடைக்கலாம்.

அதுவும் இல்லையெனில் மூன்றாவதாக உணவு தேடி அலைவது அல்லது பிச்சை எடுப்பது.

இந்த மூன்றிலும் உணவு கிடைக்கவில்லை எனில் அன்றைய நாள் சாப்பிடாமலே இருந்துவிடுகின்றனர்.

அபீர் குடும்பம் மட்டுமின்றி அங்குள்ள பெரும்பாலான குடும்பங்களின் நிலை இதுதான். குறிப்பாக குழந்தைகள் உணவு, மருந்து இன்றி செத்துக்கொண்டிருக்கின்றனர்.

AP

இதில் உணவைத் தேடிச் செல்லும் குழந்தைகள் உள்பட மக்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கியால் சுடுகின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஹமாஸ் வசம் உள்ள பிணைக் கைதிகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கிலே இஸ்ரேல் ராணுவம் இரக்கமின்றி மக்களை சுட்டு வீழ்த்துவதாக அங்குள்ள ஒருவர் கூறுகிறார்.

அபீர் குடும்பத்தினர் காலையில் எழுந்து கடல் நீரில் குளிக்கிறார்கள். குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத சூழல் இருப்பதால் கடல் நீரிலேயே தனது 6 குழந்தைகளில் ஒன்றான 6 மாத குழந்தையையும் குளிக்க வைக்கிறார் அபீரின் மனைவி ஃபதி. உப்பு நீர் என்பதால் அந்த 9 மாதக் குழந்தைகளின் கண்கள் எரிச்சல் ஏற்பட்டு அழுகிறது.

அபீரும் குழந்தைகளும்
அபீரும் குழந்தைகளும்AP

தன் குழந்தைகளின் உணவுக்காக பிச்சை எடுக்கச் செல்கிறாள் ஃபதி. பக்கத்தில் இருப்பவர்கள், சாலையில் செல்பவர்களிடம் கேட்கிறார். சில நேரம் ஏதாவது பருப்பு கிடைக்கும், பல நேரங்களில் அதுவும் இல்லை.

அபீர் உணவு தேடி உணவு மையங்களுக்குச் செல்கிறார். லாரியில் ஏதேனும் உணவுப் பொருள்கள் வந்தால் அதை பெற முயல்கிறார். அங்கும் அதே நிலைமைதான். ஒரு சில நாள்கள் உணவு கிடைக்கும். பல நாள்கள் கிடைப்பதில்லை.

அங்குள்ள கோடை வெப்பம், பசி, துயரம் காரணமாக ஒருநாளை 100 நாள்கள் போல உணர்வதாகக் கூறுகிறார்கள்.

ஃபதிக்கு வலிப்பு நோய் இருக்கிறது. ஒருமுறை உணவு தேடி லாரியை நோக்கிச் சென்றபோது காலில் துப்பாக்கியால் சுட்டனர் இஸ்ரேல் படையினர். அதேபோல 6 குழந்தைகள் என்றவுடன் சிலர் பாவப்பட்டு சிறிதளவு உணவு கொடுக்கிறார்கள்.

AP

அபீரும் அவரது முதல் மூன்று குழந்தைகளும்(10, 9, 7 வயது) மத்திய காஸாவில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் ஒரு லாரியில் இருந்து தண்ணீர் பிடிக்க பிளாஸ்டிக் கேன்களுடன் செல்கிறார்கள்.

கூட்டத்தில் அபீரைவிட வலிமையானவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். அதனால் பெரும்பாலான நாள்களில் அவருக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தபட்சத்தில் குழந்தைகளுக்காக மற்றவர்களிடம் மன்றாடுகிறார். சிலர் இரக்கப்பட்டு அவருக்கு உதவி செய்கின்றனர். அப்படி கிடைக்கும் தண்ணீர், உணவு கொண்டுதான் காலத்தைக் கழித்து வருகிறார்கள். அப்படிதான் சமீபத்தில் குழந்தைகளுக்காக ஒரு சிறிய மாவு பை கிடைத்தததாகக் கூறுகிறார் அபீர்.

AP

உதவி கேட்டுகேட்டு அபீரும் அவரது குழந்தைகளும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பழக்கமானவர்களாகவும் மாறியுள்ளனர். அபீர் உணவை எடுக்க அதிக சிரமப்படுவதால் தாங்கள் எடுத்தவற்றில் இருந்து சிலவற்றை அவருக்கு கொடுத்து உதவுவதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

"நாங்கள் அனைவருமே இங்கு பசியுடன்தான் இருக்கிறோம், நாங்கள் அனைவருமே சாப்பிட வேண்டும்" என்று கூறுகிறார்கள்.

ஃபதி பெரும்பாலும் குழந்தைகள் தூங்குவதை விரும்புகிறார். ஏனெனில் குழந்தைகள் ஓடி விளையாடும்போது அவர்களுக்கு பசி எடுக்கும். அதைக் குறைக்கவே தூங்கவைப்பதாகக் கூறுகிறார்.

சில நேரங்களில் உணவு கிடைக்காதபட்சத்தில் குழந்தைகளை மட்டும் பிச்சை எடுக்க அனுப்புகிறார்கள். உணவுக்காக குப்பைகளையும் கிளறுகிறார்கள். உணவைச் சமைக்கத் தேவையான எரிபொருள் ஆகியவற்றை அலைந்து திரிந்து சேகரிக்கின்றனர் அந்த குழந்தைகள். அபீர் மகன் குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த ஒரு பானையைத்தான் இப்போது அவர்கள் சமைக்கப் பயன்படுத்துகிறார்கள்.

அபீர், தான் பலவீனமாகிவிட்டதாகவும் உணவு, தண்ணீரைத் தேடிச் செல்லும்போது அடிக்கடி தலைச்சுற்றுவதாகவும் கூறுகிறார்.

"நாங்கள் 8 பேர். நான் என்ன செய்ய முடியும்? நான் சோர்வடைந்துவிட்டேன். இனி என்னால் முடியாது. போர் தொடர்ந்தால், என் உயிரை மாய்த்துக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. இனி பலமோ சக்தியோ என்னிடம் இல்லை" - அபீர் கூறியது.

காஸாவில் இது அபீர் என்கிற ஒருவருடைய குடும்ப நிலை. ஆனால், இன்னமும் காஸாவில் இருக்கும் லட்சக்கணக்கான குடும்பங்களின் நிலையும்கூட இதுதான் அல்லது இதைவிடவும் மோசம்!

Summary

How one Gaza family dedicates each day to finding enough food to survive

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com