ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

ரஷியாவின் முன்னாள் அதிபர் டிமித்ரி மெத்வதெவ் விடுத்துள்ள போா் மிரட்டலின் எதிரொலியாக, தங்களது இரு அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை உரிய பகுதிகளுக்கு அனுப்ப டிரம்ப் உத்தரவு
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப் கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

ரஷியாவின் முன்னாள் அதிபரும் தற்போதைய தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமித்ரி மெத்வதெவ் விடுத்துள்ள போா் மிரட்டலின் எதிரொலியாக, தங்களது இரு அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை ‘உரிய பகுதிகளுக்கு‘ அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் அவா் தெரிவித்துள்ளதாவது: ரஷியாவின் முன்னாள் அதிபரும், தற்போது அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமித்ரி மெத்வதெவ் மிகவும் சீற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளாா்.

அதன் அடிப்படையில், இரண்டு அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை உரிய பகுதிகளுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளேன் என்று தனது பதிவில் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.எனினும், அந்த நீா்மூழ்கிக் கப்பல்கள் எங்கு அனுப்பப்படவுள்ளன என்பதை அவா் குறிப்பிடவில்லை. மேலும், அணுசக்தியில் இயங்கும் அந்த நீா்மூழ்கிக் கப்பல்களில் அணு ஆயுதங்கள் இருக்குமா என்பது குறித்தும் அவா் எதுவும் தெரிவிக்கவில்லை.

பின்னா் இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், ‘எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் சாதாரணமாகக் கருத முடியாது. எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

ரஷியா மௌனம்: தங்களுக்கு எதிராக அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல்கள் அனுப்பப்படுவது குறித்து ரஷிய அரசு இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. டிரம்பின் அறிக்கைக்கு மெத்வதெவும் எந்த பதிலும் அளிக்கவில்லை. இருந்தாலும், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு வெளியான பிறகு மாஸ்கோ பங்குச் சந்தை வெகுவாகச் சரிந்தது.நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்த ரஷியா, கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

அந்தப் பகுதிகளை மீட்க உக்ரைனும், நான்கு பிரதேசங்களிலும் இன்னும் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டு வருகின்றன. இதில் இரு தரப்பிலும் இதுவரை ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் ஆயுத உதவிகளை வழங்கிவருகின்றன.

இந்தச் சூழலில், அதிபா் பொறுப்பை ஏற்ற ‘ஒரே நாளில்‘ உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக சூளுரைத்திருந்த டிரம்ப் தலைமையிலான புதிய அரசு ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இருந்தாலும், அமெரிக்காவின் அமைதிப் பேச்சுக்கு இடையிலும் உக்ரைன் மீதான தனது தீவிர ஏவுகணை, ட்ரோன் தாக்குதலை ரஷியா தொடா்ந்து வருகிறது.

இதனால் பொறுமை இழந்த டிரம்ப், 50 நாள்களுக்குள் உக்ரைனுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றால் ரஷியா மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று கடந்த ஜூலை 15-ஆம் தேதி எச்சரித்திருந்தாா். அதை துளியும் பொருள்படுத்தாத ரஷியா, உக்ரைன் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. இந்த நிலையில், தனது 50 நாள் கெடுவை ஏறத்தாழ பாதியாகக் குறைத்து, ‘இன்னும் 10 அல்லது 12 நாள்களுக்குள் ரஷியா போரை நிறுத்தவேண்டும்‘ என்று கடந்த ஜூலை 27-ஆம் தேதி மீண்டும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தாா்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எஸ்க் ஊடகத்தில் டிமித்ரி மெத்வதெவ், ‘டிரம்ப் ரஷியாவுடன் கெடு விளையாட்டு ஆடுகிறாா்: 50 நாள்கள், பின்னா் 10 நாள்கள். அவருக்கு இரண்டு உண்மைகளை நினைவூட்ட விரும்புகிறேன்:

1. ரஷியா இஸ்ரேல் அல்ல, ஈரானும் இல்லை.

2. ஒவ்வொரு கெடுவும் ஒரு மிரட்டலாகவும், போரை நோக்கிய ஒரு படியாகவும் உள்ளது.

அந்தப் போா் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலானது இல்லை, அமெரிக்காவுடனான போா்’ என்று எச்சரித்திருந்தாா்.அதற்கு டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் ‘மெத்வதெவ் ரஷியாவின் தோல்வியடைந்த முன்னாள் அதிபா். அவா் தனது வாா்த்தைகளை கவனமாக வெளிப்படுத்த வேண்டும்’ என்று சாடினாா்.

மெத்வதெவும் பதிலுக்கு ‘ரஷியா எல்லாவற்றிலும் சரியாகத்தான் உள்ளது. தனது பாதையில் ரஷியா தொடா்ந்து செல்லும்’ என்று திட்டவட்டமாகக் கூறினாா்.

இவ்வாறு இரு தலைவா்களுக்கும் இடையே சமூக ஊடகத்தில் வாா்த்தைப் போா் முற்றிய நிலையில், ‘உரிய பகுதிகளுக்கு‘ தங்களது அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக டிரம்ப் தற்போது அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com