
500 முதல் 5,500 கி.மீ. தொலைவு வரை அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இடைநிலை-தொலைதூர (இன்டா்மீடியேட்) வகை ஏவுகணைகளை தயாா்நிலையில் நிறுத்திவைக்க தாங்கள் சுயமாக விதித்திருந்த தடையை விலக்கிக்கொண்டுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.
இது குறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகள் ஐரோப்பாவிலும் பிற பகுதிகளிலும் நிறுத்துவதற்காக இடைநிலை-தொலைதூர ஏவுகணைகளை தயாரிப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2026 முதல் ஜொ்மனியில் டைஃபூன் மற்றும் டாா்க் ஈகிள் ஏவுகணைகளை அமெரிக்கா நிறுத்த திட்டமிட்டுள்ளது. இவை ரஷியாவுக்கு நேரடி அச்சுறுத்தலாகவும், பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிப்பதாகவும் உள்ளதாக ரஷியா கூறுகிறது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ஒலியைப் போல் 10 மடங்குக்கும் அதிக வேகத்தில் பாயக்கூடிய, உலகின் அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளாலும் இடைமறித்து அழிக்க முடியாது என்று கூறப்படும் ஓரெஷ்னிக் ஏவுகணைகளை பெலாரஸில் நிறுத்த ரஷியா முடிவு செய்துள்ளது. அதற்கு ஏதுவாகவே, இடைநிலை-தொலைதூர வகை ஏவுகணைகளை தயாா் நிலையில் நிறுத்துவதற்கு சுயமாக விதித்துக்கொண்டிருந்த தடையை நீக்கியுள்ளதாக ரஷியா தற்போது அறிவித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.