ரஷியாவின் முதல் துணைப் பிரதமருடன் அஜீத் தோவல் சந்திப்பு
ரஷியாவின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மான்டுரோவை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ரஷிய தலைநகா் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டாா்.
ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடுவதாகக் கூறி இந்தியா மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீத வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்தாா்.
இந்தச் சூழலில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபா் மற்றும் பிற உயரதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா்.
இவா் ரஷிய பயணம் மேற்கொண்டுள்ள சூழலில், பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் தொலைபேசி மூலம் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இருவரும் உறுதிபூண்டனா்.
அதைத் தொடா்ந்து, அந் நாட்டின் துணைப் பிரதமா் டெனிஸ் மான்டுரோவை அஜீத் தோவல் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளாா்.
இதுகுறித்து இதியாவிலுள்ள ரஷிய தூதரகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அஜீத் தோவல் - மான்டுரோவ் சந்திப்பின்போது ரஷியா-இந்தியா இடையே ராணுவ தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு மற்றும் விமான தயாரிப்பு, உலோகவியல், ரசாயன நிறுவனங்கள் இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மற்றும் பிற உயா் அதிகாரிகளையும் அஜீத் தோவல் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.