
இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% வரி விதித்து உத்தரவிட்டிருப்பதால் ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கமாகும் என்றும் அமெரிக்கா மோசமாக பாதிக்கப்படக்கூடும் என்றும் முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து ஜான் போல்டன் குறிப்பிட்டுள்ளவை:
“இந்தியாவை அமெரிக்காவுக்கு மேலும் நெருக்கமாக்குவதற்கு பதிலாக, சீனா மீது தளர்வான போக்கிலும், இந்தியா மீது கடும் வரி விதிப்பையும் உள்ளடக்கிய டிரம்ப்பின் இந்த நடவடிக்கையானது, ’ரஷியா, சீனாவிடமிருந்து இந்தியாவை விலக்க’ கடந்த இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளை வலுவிழக்கச் செய்துள்ளது.”
“ரஷியாவை காயப்படுத்துவதாகக் கருதி இந்தியா மீது ஏற்கெனவே விதித்திருந்த வரியுடன் அபராதமாக கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. இந்த நடவடிக்கை இந்தியாவை ரஷியா, சீனாவுக்கு நெருக்கமாக்கும். இதன்மூலம், அவர்கள் ஒன்றிணைந்து அமெரிக்காவுக்கு எதிராக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் வழிவகுக்கும்.
அமெரிக்காவின் நெடுங்கால வெளியுறவுக் கொள்கைகளுடன் இந்த நடவடிக்கை ஒத்துப்போகவில்லை. நட்புறவு நாடுகளையும் எதிரிகளுக்கும் ஒரே விதமாக வரி விதிப்பதா? டிரம்ப் செய்திருப்பது மிகப்பெரிய தவறு. அமெரிக்காவையே திரும்ப பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீத வரி விதிப்பு ஆக. 27-ஆம் தேதியிலிருந்து அமலாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஆகஸ்ட் 31 - செப்டம்பா் 1-ஆம் தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வாா் என வெளியாகியுள்ள அறிவிப்புக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. அப்போது சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்களையும் அவா் சந்தித்துப் பேசுவாா் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.