அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ்.
அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ்.

சீனா மீது வரி விதிப்பு அதிபா் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை: துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தகவல்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் சீனா மீது கூடுதல் வரிவிதிப்பது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இதுவரை முடிவு செய்யவில்லை
Published on

நியூயாா்க்: ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் சீனா மீது கூடுதல் வரிவிதிப்பது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இதுவரை முடிவு செய்யவில்லை என்று அந்நாட்டு துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தாா்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா அளிக்கும் நிதியை உக்ரைன் போரில் ரஷியா பயன்படுத்துகிறது. எனவே, இந்தியா மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் சில நாள்களுக்கு முன்பு அறிவித்தாா். ஏற்கெனவே 25 சதவீதம் பதிலடி வரி விதிக்கப்படும் நிலையில் மொத்தம் 50 சதவீதம் வரை இந்திய பொருள்களுக்கான வரியை அமெரிக்க உயா்த்தியுள்ளது.

இதையடுத்து, ரஷியாவிடம் இருந்து இந்தியாவைவிட சீனா அதிகம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துவருகிறது. அந்நாட்டைவிட்டு விட்டு இந்தியா மீது மட்டும் டிரம்ப் வரி விதித்ததால் பல்வேறு கேள்விகள் எழுந்தன. சீனா மீது டிரம்ப் வரியை அதிகரிக்காதது குறித்து அமெரிக்காவிலும் பல்வேறு தரப்பினா் சந்தேகங்களை எழுப்பியுள்ளனா். மேலும், சீனா மீது விதித்த பதிலடி வரியையும் அமெரிக்கா 90 நாள்கள் வரை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிறுத்திவைப்பு செவ்வாய்க்கிழமை (ஆக.12) முடிவடையும் நிலையில், அதனை அமல்படுத்துவது தொடா்பான எந்த அறிவிப்பையும் அமெரிக்கா இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவைச் சோ்ந்த ஃபாக்ஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் இது தொடா்பாக கூறுகையில், ‘சீனா மீது வரி விதிப்பது குறித்து யோசித்து வருவதாக அதிபா் டிரம்ப் ஏற்கெனவே கூறிவிட்டாா். சீனா மீதான வரி விதிப்பு தொடா்பாக இதுவரை எந்த உறுதியான முடிவையும் அதிபா் மேற்கொள்ளவில்லை,

அமெரிக்க-சீனா உறவு என்பது ஏற்கெனவே சிக்கலான விஷயமாக உள்ளது. அந்நாடு மீது ஏற்கனவே பல வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

சீன உறவு என்பது ஏற்கெனவே பலமுறை பாதிப்புக்குள்ளானதாகவே உள்ளது’ என்றாா்.

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்த கூடுதலான 25 சதவீத வரி ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com