இந்திய எல்லைக்கு அருகே திபெத் ரயில் இணைப்பு: சீனா திட்டம்
பெய்ஜிங்: நிகழாண்டு இந்திய எல்லை கோட்டுப் பகுதிக்கு அருகே திபெத்துடன் ரயில் இணைப்புத் திட்டத்தை தொடங்க சீனா முடிவு செய்துள்ளது.
சீனாவின் ஷின்ஜியாங் மாகாணம்-அந்நாட்டு ஆக்கிரமிப்பில் உள்ள திபெத் இடையே ரயில் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது சீனாவின் நீண்ட கால திட்டமாகும். ஷின்ஜியாங்கில் உள்ள ஹோடன் பகுதியில் இருந்து திபெத்தில் உள்ள லாசா பகுதி வரை, இந்த ரயில் இணைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
ஷின்ஜியாங்-திபெத் ரயில் இணைப்பு என்பது திபெத்தை சீனாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் 4 வழித்தடங்களில் ஒன்றாகும்.
இந்தத் திட்டத்தின் முழு செலவினம் குறித்த விவரம் வெளியாகவில்லை. எனினும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக சீனாவின் சிச்சுவான் மாகாணம்-திபெத் இடையே 1,800 கி.மீ. தொலைவு ரயில் இணைப்பை ஏற்படுத்த 45 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.3.94 லட்சம் கோடி) தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தின் சில பகுதிகள் சீனா-இந்தியா இடையிலான எல்லை கோட்டுப் பகுதிக்கு அருகில் செல்லும். நிகழாண்டு இந்த ரயில் இணைப்புத் திட்டத்தை தொடங்க சீனா முடிவு செய்துள்ளது என்று ஹாங்காங்கில் உள்ள செளத் சைனா மாா்னிங் போஸ்ட் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே திபெத்தின் லசா பகுதியில் தொடங்கும் அதிவேக ரயில் வழித்தடம் அருணாசல பிரதேச எல்லையையொட்டி செல்கிறது.
இதனிடையே திபெத்தில் பாயும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, உலகின் மிகப் பெரிய அணையைக் கட்டும் பணிகளை சீனா தொடங்கியுள்ளது. அருணாசல பிரதேசத்தில் இந்திய-சீன எல்லை கோட்டுப் பகுதிக்கு அருகில் இருக்கும் இடத்தில், அந்தப் பணி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.