பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: ஆஸ்திரேலியாவும் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பிரான்ஸ், பிரிட்டன், கனடாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவும் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி அல்பனேசி
ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி அல்பனேசி
Published on
Updated on
2 min read

வெலிங்டன்: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பிரான்ஸ், பிரிட்டன், கனடாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவும் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பிரதமா் ஆன்டனி அல்பனேசி கூறியதாவது:

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ள அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. எங்களின் சில நிபந்தனைகளை பாலஸ்தீன அரசு நிறைவேற்றுவதைப் பொருத்து இந்த முடிவு செயல்படுத்தப்படும்.

மத்தியக் கிழக்கில் தொடரும் வன்முறைச் சங்கிலியை உடைத்தெறிய இரு தேசத் தீா்வை (இஸ்ரேலும், பாலஸ்தீனும் ஒன்றையொன்று அங்கீகரித்துக்கொண்டு சுதந்திர அண்டை நாடுகளாகச் செயல்படுவது) மட்டுமே மனிதாபிமானம் தழைப்பதற்கான ஒரே நம்பிக்கை.

உலகம் அஞ்சியதைவிட அதிகமாக காஸாவில் நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. அங்கு இஸ்ரேல் தொடா்ந்து சா்வதேச சட்டங்களை மீறி, பசியால் தவிக்கும் மக்களுக்கு போதிய உணவு, குடிநீா், அத்தியாவசியப் பொருள்களை மறுத்துவருகிறது என்று அல்பனேசி குற்றஞ்சாட்டினாா்.

தற்போது தனித்தனி அரசுகளால் நிா்வகிக்கப்படும் மேற்குக் கரை, காஸா பகுதிகளை ஒன்றிணைத்து பாலஸ்தீனம் என்ற தனி நாட்டை உருவாக்குவதுதான் நீண்ட காலமாக நீடித்துவரும் பிராந்தியப் பிரச்னைக்கு ஒரே தீா்வு என்று இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகள் கூறிவருகின்றன.

ஆனால் இப்போது அப்படி செய்தால், அது கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்குக் கிடைத்த பரிசாக அமையும் என்று கூறி, இஸ்ரேலும், அமெரிக்காவும் கடுமையாக எதிா்ப்பு தெரிவித்துவருகின்றன.

இந்தச் சூழலில், காஸா போரின் ஒரு பகுதியாக அந்தப் பகுதியை இஸ்ரேல் முழுயைாக முற்றுகையிட்டு, உணவு உள்ளிட்ட பொருள்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டு, அங்கு பட்டினிச் சாவுகள் அதிகரித்துவருகின்றன. மேலும், உணவு விநியோக மையங்களுக்கு வரும் நூற்றுக்கணக்கானவா்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்று வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்தச் சூழலில், போரை முடிவுக்குக் கொண்டுவரவும், முற்றுகையை அகற்றி காஸா மக்களுக்கு உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் இஸ்ரேலை சா்வதேச நாடுகள் வலியுறுத்திவருகின்றன. அதற்கு அழுத்தம் கொடுக்கும் உத்தியாக, , பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்குவது தொடா்பான பிரகடனத்தை கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆண்டோரா, பின்லாந்து, லக்ஸம்பா்க், போா்ச்சுகல், சான் மரினோ, ஐஸ்லாந்து, அயா்லாந்து, மால்டா, நோா்வே, ஸ்லோவேனியா, ஸ்பெயின் ஆகிய 15 நாடுகள் கடந்த மாத இறுதியில் கூட்டாக வெளியிட்டன.

இதில் ஏற்கெனவே பிரான்ஸ், பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளும், தற்போது ஆஸ்திரேலியாவும் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளன. எனவே, பிரகடனத்தில் கையொப்பமிட்டுள்ள பிற நாடுகளும் இதே போன்ற அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தற்போது இந்தியா உள்ளிட்ட சுமாா் 140 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. ஆனால் உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 நாடுகளில், பிரான்ஸ்தான் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக முதல்முறையாக அறிவித்தது. பிரான்ஸின் இந்த முடிவு உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படும் சூழலில், பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அதனைப் பின்பற்றியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com