அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளுடனான வர்த்தகத்துக்கு விதித்து வரும் புதிய வரி விதிப்பு முறையால், வரி விதிப்பை சந்திக்கும் நாடுகளோடு சேர்த்து, அமெரிக்கர்களும்தான் பாதிக்கப்படுவார்கள்.
இந்த வரி விதிப்பை, பெரும்பாலான நிறுவனங்கள், வாங்குவோர் தலையில் சுமத்ததே பார்க்கும். எடுத்தவுடன் முழுமையாக சுமத்தாவிட்டாலும் படிப்படியாக வரி முழுவதும் பொருள்களின் விலை மீது ஏற்றப்படலாம். இதனால் அந்நாட்டில் சில பொருள்களின் விலை சுமார் ரகம் முதல் தடாலடி ரகம் வரை உயரும் வாய்ப்பு உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்பட சுமார் 70 நாடுகளுக்கு 10 முதல் 41 சதவீத வரியும், பிற நாடுகளுக்கு அதை விட அதிகமான வரியும் விதித்துள்ளார்.
இதனால், அமெரிக்காவில் விலை உயர்வை சந்திக்கும் பொருள்களில் முதல் இடத்தில் இருப்பது காபி. அடுத்து ஷு, வீட்டு உபயோகப் பொருள்கள். இதுபோன்ற விலை உயர்வால், அமெரிக்கர்களுக்கு ஓராண்டுக்கு அத்தியாவசிய செலவு 2400 டாலர் வரை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
காபி விலை
நிச்சயம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பினால் அமெரிக்காவில் வாழும் காபி பிரியர்கள் சற்று கசப்பான அனுபவத்தை உணர்வார்கள்.
அமெரிக்காவுக்கு அதிகளவில் காபியை ஏற்றுமதி செய்யும் பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, பிரேசில், தனது காபி ஏற்றுமதியை குறைக்காமல், விலையை உயர்த்தினால் அமெரிக்கர்களுக்கு கடும் சிக்கல்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த மே மாதம் காபி விலை ஏற்கனவே 11 சதவீதம் உயர்ந்தது. பல்வேறு நாடுகளில் இயற்கை சீற்றங்கள் காரணமாக காபி உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதே வேளையில் தேவை அதிகரித்ததால் காபி விலை உயர்ந்தது.
தற்போது டிரம்ப் வரி மற்றும் பிரேசிலுக்கு 50 சதவீதம் போன்றவை மீண்டும் காபியின் விலையை எகிறச் செய்யும் என்றே கருதப்படுகிறது.
ஏற்கனவே அமெரிக்காவில் காபி விலை அதிகமாம். இனி மீண்டும் உயர்ந்தால், மக்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு மாறிவிடும் என்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.