
மியான்மர் ராணுவ அரசின் படைகளுக்கும், உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான வான்வழித் தாக்குதல்களில் சிக்கிய நிவாரணக் குழுவைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு ஆட்சியைக் கலைத்து, கடந்த 2021-ம் ஆண்டு முதல் அந்நாட்டை ராணுவ அரசு ஆட்சி செய்து வருகின்றது. இதனால், ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், மத்திய சாகாயிங் மாகாணத்தில், மண்டாலாய் நகரத்தின் அருகில் ராணுவத்துக்கும், கிளர்ச்சியார்களுக்கும் இடையில் கடந்த ஆக.11 ஆம் தேதியன்று கடும் மோதல் வெடித்துள்ளது.
இருதரப்புக்கும் இடையிலான மோதலின்போது தாவுங் யின் எனும் கிராமத்தின் அருகில், மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கி வந்த குழுவின் வாகனம் தாக்குதல்கள் நடைபெற்ற பகுதியில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, அங்கு நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், நிவாரணக் குழுவின் வாகனமும் சிக்கி வெடித்து சிதறியதில் 8 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 8 பேரில் ராணுவ அரசுக்கு எதிராகச் சண்டையிட்ட கிளர்ச்சியாளர் ஒருவரும் கொல்லப்பட்டார் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து ராணுவ அரசின் தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, உள்நாட்டுப் போரினால் மியான்மரில் சுமார் 35 லட்சம் மக்கள் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேர் வறுமையில் சிக்கித் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் டிசம்பரில் மியான்மர் நாட்டின் தேர்தல் நடத்தப்படும் என ராணுவ அரசு அறிவித்திருந்தது. இந்தத் தேர்தலானது ராணுவ அரசை சட்டப்பூர்வமாக நீட்டிப்பதற்கான திட்டம் எனக் கூறி அதனை புறக்கணிக்கப் போவதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.