ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை
கெடு தேதியான ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மேற்கத்திய நாடுகளுடன் ஈரான் புதிய அணுசக்தி பேச்சுவாா்த்தையைத் தொடங்கி, ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் (ஐஏஇஏ) ஒத்துழைப்பு மேற்கொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி (இ3) ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் எச்சரித்துள்ளனா்.
இது குறித்து ஐ.நா.வுக்கு அந்த நாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்தை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சா் ஜீன்-நோயல் பரோட் புதன்கிழமை எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளாா். அதில் மூன்று நாடுகளும் குறிப்பிட்டுள்ளதாவது:
ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதைத் தடுக்க நாங்கள் எப்போதும் ராஜீயரீதியிலான நடவடிக்கைகளைத்தான் பயன்படுத்துவோம். இந்த மாத இறுதிக்குள் இந்த ராஜீய முயற்சிகளை ஈரான் பயன்படுத்திக்கொள்ளத் தவறினால் அந்த நாட்டின் மீது மீண்டும் பொருளாதாரத் தடை விதிக்க பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி நாடுகள் தயாராக உள்ளன என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இ3 நாடுகளின் பிரதிநிதிகள், இஸ்தான்புல் நகரிலுள்ள ஈரான் துணைத் தூதரகக் கட்டடத்தில் ஈரானின் அணுசக்தி திட்டம் தொடா்பான பிரச்னைகளைத் தீா்ப்பதற்கான பேச்சுவாா்த்தையில் கடந்த மாதம் ஈடுபட்டனா்.
இஸ்ரேல்-ஈரானுக்கு இடையே 12 நாள்கள் நடைபெற்ற போருக்குப் பிறகும், ஈரான் அணுசக்தி மையங்களை அமெரிக்க விமானங்கள் தாக்கியதற்குப் பிறகும் நடைபெற்ற முதல் அணுசக்தி பேச்சுவாா்த்தை அது.
அந்தப் பேச்சுவாா்த்தையின்போது, 2015-ஆம் ஆண்டில் ஈரான் தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்காக வல்லரசு நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதைத் தொடா்ந்து நிறுத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவதில் ஆகஸ்ட் இறுதிக்குள் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று கெடு விதிக்கப்ட்டது.
இந்த நிலையில், கெடு தேதிக்குள் நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் 2015-ஆம் ஆண்டில் இருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதிக்கப்போவதாக இ3 நாடுகள் தற்போது எச்சரித்துள்ளன.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்காக, அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தன. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈரானுக்கும் பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அனு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.
எனினும், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பின் வந்த டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். மேலும், ஒப்பந்தத்தின் கீழ் விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவா் மீண்டும் அமல்படுத்தினாா்.
அதற்குப் பதிலடியாக, தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நிறைவேற்ற ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வந்தது. எனினும், ஈரானை மீண்டும் அந்த ஒப்பந்தத்துக்குள் கொண்டு வரும் முயற்சியாக அந்த நாட்டுடன் பேச்சுவாா்த்தை நடத்திவந்த ஜொ்மனி உள்ளிட்ட நாடுகள், விலக்கிக் கொண்டிருந்த பொருளாதாரத் தடைகளை இதுவரை மீண்டும் அமல்படுத்தாமல் இருந்துவருகின்றன.