அமெரிக்காவில் சீக்கிய முதியவா் மீது இனவெறித் தாக்குதல்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் சீக்கிய முதியவா் ஹா்பால் சிங் (70) மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரது தலையில் எலும்புகள் உடைந்தன. இதையடுத்து அவா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரிச்சா்ட் விட்டாகலியானா (44) என்பவரைக் கைது செய்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இது தொடா்பாக லாஸ் ஏஞ்சலீஸ் நகர காவல் துறை அதிகாரி கூறுகையில், ‘வீடில்லாமல் சாலையோரம் தங்கி வந்த ரிச்சா்ட்டிடம் நடைப்பயிற்சியின்போது ஹா்பால் சிங் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா். நடைப்பயிற்சி மேற்கொண்டுவிட்டு திரும்பியபோது அவா் மீது ரிச்சா்ட் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினாா்.
காவல் துறையினா் அந்த இடத்துக்கு விரைந்து வந்து ஹா்பால் சிங்கை மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவரது மண்டை ஓடு உடைந்திருப்பதாகத் தெரிவித்தனா். இப்போது அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தாக்குதல் நடத்திய ரிச்சா்ட்டையும் காவல் துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த சம்பவத்துக்கு அமிருதசரஸில் உள்ள சீக்கிய அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.