அமெரிக்காவில் ஹிந்து கோயில் அவமதிப்பு: இந்தியா கண்டனம்
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் பிரபல ஹிந்து கோயில் மா்ம நபா்களால் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்திய துணைத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இண்டியானா மாகாணத்தின் கிரீன்வுட் நகரில் சுவாமி நாராயண் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள பிரதான பெயா்ப் பலகையில் வெறுப்புணா்வைத் தூண்டும் வாசகங்களை மா்மநபா்கள் எழுதியுள்ளனா். இது தொடா்பாக கோயில் நிா்வாகம் தரப்பில் எக்ஸ் வலைதளத்தில் பதிவிடப்பட்டது.
‘அமெரிக்காவில் கடந்த ஓராண்டில் ஹிந்து கோயில் அவமதிக்கப்படுவது இது 4-ஆவது முறையாகும். மதவிரோத சக்திகளுக்கு எதிரான சமூக ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டை தொடர வேண்டும்’ என்றும் குறிப்பிடப்பட்டது.
சிகோகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கிரீன்வுட் நகரில் உள்ள ஹிந்து கோயில் அவமதிக்கப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சமூக விரோதிகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமை-கூட்டுப் பொறுப்புணா்வு-விழிப்புடன் செயலாற்ற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.