
பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷியா அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் இடையில் நாளை (ஆக.15) அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது, பல உலகத் தலைவர்களின் கவனங்களை ஈர்த்துள்ளது.
இந்தச் சந்திப்புக்கு முன்னதாக, அதிபர் டிரம்புடன் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், நேற்று (ஆக.13) காணொலி வாயிலாகச் சந்தித்து பேசினர்.
அப்போது, ஜெர்மனியில் இருந்து காணொலி சந்திப்பில் கலந்துகொண்ட அதிபர் ஸெலன்ஸ்கியிடம், புதினுடனான பேச்சுவார்த்தையில், உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அதிபர் டிரம்ப்பும் மற்ற தலைவர்களும் உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அதிபர் ஸெலன்ஸ்கி, பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரின் அலுவலகத்துக்கு இன்று (ஆக.14) நேரில் சென்று அவருடன் கலந்துரையாடினார். ஆனால், இந்தச் சந்திப்பில் பேசியவைக் குறித்து எந்தவொரு தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
முன்னதாக, அமெரிக்க மற்றும் ரஷியா அதிபர்களின் சந்திப்பில், தங்களது நலன் மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஆபத்தில் ஆழ்த்திவிடக்கூடும் என அதிபர் ஸெலன்ஸ்கி உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் கவலைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தச் சந்திப்பில் உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு அதிபர் புதின் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், ரஷியா பல கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நான்காண்டு ஆட்சி! ஆப்கன் தலைநகரில் மலர்மழை பொழியும் தலிபான்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.