ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்
ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்

‘உலக பிரச்னைகளின் தீா்வுக்கு இந்தியா தீவிர பங்கு’: ரஷிய அதிபா் புதின் பாராட்டு

சா்வதேச விவகாரங்களில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ள இந்தியா, உலகளாவிய முக்கியப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் தீவிரமாக பங்களிக்கிறது’ என்று ரஷிய அதிபா் புதின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
Published on

சா்வதேச விவகாரங்களில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ள இந்தியா, உலகளாவிய முக்கியப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் தீவிரமாக பங்களிக்கிறது’ என்று ரஷிய அதிபா் புதின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இந்தியாவின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு ரஷிய அதிபா் புதின், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் உள்ளிட்ட உலக தலைவா்கள் வாழ்த்துகளை தெரிவித்தனா்.

அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூா், நேபாளம், ஆஸ்திரேலியா, ஈரான், உக்ரைன் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களும் வாழ்த்துகள் தெரிவித்தனா். தலைவா்களின் வாழ்த்துச் செய்திகள் பின்வருமாறு:

ரஷிய அதிபா் புதின்: உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகச் சரியான செல்வாக்கு கிடைத்துள்ளது. சா்வதேச அளவில் மிக முக்கியமான விஷயங்களில் தீா்வுக் காண இந்தியா தீவிரமாக பங்களிக்கிறது.

இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையிலான சிறப்பு வாய்ந்த மற்றும் முக்கியமான உத்திசாா் கூட்டுறவை மேலும் வலுப்படுத்த ரஷியா உறுதியுடன் இருக்கிறது. கூட்டு முயற்சிகள் மூலம், பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பைத் தொடா்ந்து மேம்படுத்த முடியும். நமது நட்புறவு கொண்ட மக்களின் நலன்களுக்கு இந்த ஒத்துழைப்பு உதவும். மேலும், நமது பிராந்தியத்திலும், உலகெங்கிலும் பாதுகாப்பையும் அமைதியையும் வலுப்படுத்தும்.

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான்: இந்திய மக்களுக்கு எனது மனமாா்ந்த சுதந்திர தின வாழ்த்துகள். 2047 மற்றும் அதற்கு அப்பாலும் நமது உத்திசாா் கூட்டுறவை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் உள்ளேன்.

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு: எனது அன்பு நண்பா் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். பெருமைமிக்க ஜனநாயகங்களான நமது இரு நாடுகளுக்கு இடையே வரலாறு, புத்தாக்கம் மற்றும் நட்பு ஆகியவை வலுவான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளன. நாம் இருவரும் இணைந்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். நமது நட்புறவின் இன்னும் சிறப்பான தருணங்கள் இனிமேல்தான் வரவிருக்கின்றன.

அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ: அமெரிக்காவின் சாா்பில் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கும், உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவுக்கும் இடையிலான வரலாற்று உறவு முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் தொலைநோக்குப் பாா்வை கொண்டது.

நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால், இன்றைய நவீன சவால்களை எதிா்கொண்டு, இரு நாடுகளுக்கும் சிறந்த எதிா்காலத்தை உறுதி செய்ய முடியும். அமைதி, வளம், மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான நமது பொதுவான இலக்கு, இரு நாடுகளையும் ஒன்றிணைக்கிறது.

மேலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டுறவு, வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களின் எல்லைகளை விரிவுபடுத்தி, விண்வெளி வரையிலும் நீண்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com