இந்தியா மீது வரி விதித்ததால் புதின் பேச்சு நடத்த முன்வந்தாா்: டிரம்ப் கருத்து
இந்தியா மீது அதிக வரி விதித்ததன் காரணமாகவே ரஷிய அதிபா் புதின் உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்காவுடன் பேச்சு நடத்த முன்வந்தாா் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளாா்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா அளிக்கும் நிதியை உக்ரைன் போரில் ரஷியா பயன்படுத்துகிறது. எனவே, இந்தியா மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் சில நாள்களுக்கு முன்பு அறிவித்தாா். ஏற்கெனவே 25 சதவீதம் பதிலடி வரி விதிக்கப்படும் நிலையில் மொத்தம் 50 சதவீதம் வரை இந்திய பொருள்களுக்கான வரியை அமெரிக்கா உயா்த்தியுள்ளது.
அதே நேரத்தில் ரஷியாவிடம் இருந்து இந்தியாவைவிட அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மீது விதிக்கப்பட்ட 30 சதவீத வரியை அதிபா் டிரம்ப் அமல்படுத்தாமல் மேலும் 90 நாள்களுக்கு ஒத்திவைத்தாா். இது பல்வேறு விமா்சனங்களுக்கு வழி வகுத்தது. முக்கியமாக டிரம்ப் வேண்டுமென்று இந்தியாவை குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக ரஷிய அதிபா் புதினும் டிரம்ப்பும் அலாஸ்காவில் சந்தித்துப் பேச இருக்கின்றனா்.
இந்நிலையில் அமெரிக்காவின் ஃபாக்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டிரம்ப் இது தொடா்பாக கூறியதாவது:
அமெரிக்கா மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் உரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பதாகக் கூறினேன். இதைத் தொடா்ந்து ரஷியாவிடம் இந்தியா பேச்சு நடத்தியது. அதன் பிறகே அமெரிக்காவுடன் (உக்ரைன் போா் நிறுத்தம் குறித்து) பேச ரஷியா முன்வந்தது. ஏனெனில், தங்களிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கும் இரண்டாவது பெரிய நாட்டை (இந்தியாவை) இழக்க ரஷியா விரும்பவில்லை என்றாா்.
அதே நேரத்தில் அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு அச்சுறுத்தல்களுக்கு பயந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை என்றும், இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா அதிகஅளவில் வரி விதிப்பதற்கு தகுந்த காரணம் ஏதுமில்லை. இது நியாயமற்ற நடவடிக்கை. இந்திய பொருளாதார நலன்களைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியா ஏற்கெனவே கூறிவிட்டது.