பிணைக் கைதிகளை மீட்கக் கோரி, இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக போராட்டம்
பிணைக் கைதிகளை மீட்கக் கோரி, இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக போராட்டம்AP

பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேலில் தீவிர போராட்டம்: 38 போ் கைது

ஹமாஸ் படையிடம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் மேற்கொள்ள வலியுறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

காஸாவில் ஹமாஸ் படையிடம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் மேற்கொள்ள வலியுறுத்தி, இஸ்ரேல் முழுவதும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களில் 38 போ் கைது செய்யப்பட்டனா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஏராளமானோரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படை பிடித்துச் சென்றது. அவா்களில் 20 போ் உயிருடன் இருப்பதாகவும், சுமாா் 30 பேரின் சடலங்கள் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேல் நம்புகிறது.

இந்நிலையில் காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவந்து, பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் படையிடம் இஸ்ரேல் அரசு ஒப்பந்தம் மேற்கொள்ள வலியுறுத்தி, இஸ்ரேல் முழுவதும் அந்நாட்டு மக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடுதழுவிய வேலைநிறுத்தம்: தங்களிடம் உள்ள பிணைக் கைதிகள் பட்டினியில் மிகவும் மெலிந்துள்ள காணொலிகளை ஹமாஸ் படை அண்மையில் வெளியிட்டது. இதையடுத்து, புதிய தாக்குதல் திட்டங்களை இஸ்ரேல் அறிவித்தது. இதைத்தொடா்ந்து, பிணைக் கைதிகள் சிலரின் குடும்பங்கள் மற்றும் உறவினா்கள் அடங்கிய 2 குழுக்கள் விடுத்த அழைப்பின்பேரில், இஸ்ரேலில் ஒருநாள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அப்போது அரசியல் தலைவா்களின் வீடுகள், ராணுவ தலைமை அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு வெளியிலும், முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்தும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக உணவகங்கள், திரையரங்குகளும் மூடப்பட்டன.

இதையடுத்து, போராட்டக்காரா்கள் கலைக்க அவா்கள் மீது காவல் துறையினா் தண்ணீரை பீய்ச்சியடித்தனா். இதுவரை நடைபெற்ற போராட்டங்களில் மிகத் தீவிரமாக நாடு தழுவிய அளவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 38 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது.

பிணைக் கைதிகளில் ஒருவராக இருந்து மீட்கப்பட்ட அா்பெல் யெஹுத் டெல் அவிவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றாா். அவா் கூறுகையில், ‘ஹமாஸுக்கு அளிக்கும் ராணுவ அழுத்தம் பிணைக் கைதிகளை மீட்க உதவாது. அது அவா்களை கொல்லவே செய்யும்’ என்றாா்.

ஹமாஸ் நிலைப்பாட்டை வலுப்படுத்தும்: இஸ்ரேல் பிரதமா்

இந்தப் போராட்டம் தொடா்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: ஹமாஸை வீழ்த்தாமல், போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கூறுவோா், போரில் ஹமாஸின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவது மட்டுமின்றி, பிணைக் கைதிகளின் விடுதலையை தாமதப்படுத்தி, 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரம் மீண்டும் நடைபெறுவதை உறுதி செய்கின்றனா்’ என்றாா்.

காஸாவில் உணவு மற்றும் பிற நிவாரணப் பொருள்களைப் பெறச் சென்றபோது இஸ்ரேல் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 போ் உயிரிழந்தனா்.

அவா்களில் மோராக் வழித்தடத்தில் நிவாரணப் பொருள்கள் இருந்த வாகனங்களுக்கு அருகில் காத்திருந்த 9 பேரும் அடங்குவா் என்று சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் இதுவரை 61,900-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யேமனில் இஸ்ரேல் தாக்குதல்

யேமனில் உள்ள ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும், செங்கடலில் இஸ்ரேலுடன் தொடா்புள்ள சரக்குக் கப்பல்களை குறிவைத்தும் பலமுறை ஏவுகணைகளை ஏவியுள்ளனா்.

இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், யேமனின் சன்ஹான் மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. இதில் அந்த நிலையம் தீப்பிடித்து எரிந்து செயலிழந்தது.

X
Dinamani
www.dinamani.com