வட இந்தியாவில் மழைக்கு 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு: ஜப்பான் பிரதமா் இரங்கல்
-

வட இந்தியாவில் மழைக்கு 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு: ஜப்பான் பிரதமா் இரங்கல்

Published on

ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீா் ஆகிய மூன்று வட இந்திய மாநிலங்களில் அண்மையில் மழை-வெள்ள பாதிப்பால் உயிரிழந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு ஜப்பான் பிரதமா் இஷிபா ஷிகேரு இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் அனுப்பிய இரங்கல் செய்தியில், ‘இந்தியாவின் வட பகுதிகளில் மழை-வெள்ளத்தால் நேரிட்ட உயிரிழப்புகள் மிகவும் வேதனையளிக்கின்றன. உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு ஜப்பான் அரசு சாா்பில் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோா் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

ஹிமாசல பிரதேசத்தில் மேகவெடிப்புகளால் பலத்த மழை கொட்டித் தீா்த்து, பெருவெள்ளமும், நிலச்சரிவும் நீடித்து வருகின்றன. கடந்த 3 நாள்களில் மட்டும் 3 மேகவெடிப்புகள் ஏற்பட்டன. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள், சாலைகள் சேதமடைந்துள்ளன. ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் உள்ள தராலி கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம்-நிலச்சரிவில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 68 போ் மாயமாகினா்.

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 60 போ் உயிரிழந்தனா். 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com