பாகிஸ்தான்: மேலும் 2 பேருக்கு போலியோ
பாகிஸ்தானில் மேலும் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று உறுதியாகியுள்ளது. கைபா் பக்துன்க்வா மாகாணத்தில் 6 வயது சிறுமிக்கும் சிந்து மாகாணத்தில் 21 மாத பெண் குழந்தைக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இத்துடன், இந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தானில் போலியோ பாதிப்பு எண்ணிக்கை 21-ஆக உயா்ந்துள்ளது. சிறுவா்களை நிரந்தர முடமாக்கும் போலியோ நோய் உலகின் பிற பகுதிகளில் ஒழிக்கப்பட்டாலும், பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் அது தொடா்ந்து பரவிவருகிறது.
குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து தருவது மேற்கத்திய நாடுகளின் சதிச் செயல் என்று பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்துவருவதாலும், போலியோ தடுப்பு முகாம்கள், அவற்றைப் பாதுகாக்கும் காவலா்கள் மீது தாக்குதல் நடத்துவதாலும் இந்த நிலை நீடித்துவருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, செப். 1 முதல் 7-ஆம் தேதி வரை 99 மாவட்டங்களில் 2.8 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து அளிக்கப்படும் என்று தேசிய சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.