
2024-ம் ஆண்டில் மட்டும் சர்வதேச அளவில் 383 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், இது சர்வதேச அக்கறையின்மையின் “வெட்கக்கேடான குற்றச்சாட்டு எனவும், ஐக்கிய நாடுகளின் சபை அறிவித்துள்ளது.
காஸா, சூடான் போன்ற போர் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மக்களுக்கு உதவிச் செய்யும் நிவாரணப் பணியாளர்களின் மீதான தாக்குதல்கள் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில் மட்டும் 383 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், இது 2023 ஆம் ஆண்டின் பலி எண்ணிக்கையை விட 31 சதவிகிதம் அதிகம் எனவும் ஐ.நா. சபை இன்று (ஆக.19) தெரிவித்துள்ளது.
இதில், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் அங்கு பணியாற்றிய நிவாரணப் பணியாளர்கள் 181 பேரும், சூடானில் சுமார் 60 பேரும் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உள்நாட்டு பணியாளர்கள் என்றும் அவர்களில் சிலர் பணியின்போதும் மற்றும் சிலர் அவர்களது வீட்டிலும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, சுமார் 308 நிவாரணப் பணியாளர்கள் படுகாயமடைந்ததுடன், 125 பேர் கடத்தப்பட்டுள்ளனர். மேலும், 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
நிவாரணப் பணியாளர்களின் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின்படி, நிகழாண்டு (2025) ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை, 265 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து, ஐநா நிவாரணப் பணிகளின் தலைவர் டாம் ஃப்ளெட்சர் கூறியதாவது:
“எந்தப் பொறுப்பும் இல்லாமல், இந்த அளவிலான தாக்குதல்கள், சர்வதேச செயலற்றதன்மை மற்றும் அக்கறையின்மைக்கு எதிரான வெட்கக்கேடான குற்றச்சாட்டாகும்.
அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்கள் மனிதநேயத்திற்காகச் செயல்பட வேண்டும். மக்களை பாதுகாப்பதோடு, தொழிலாளர்களுக்கும் உதவ வேண்டும், குற்றவாளிகளைப் பொறுப்பேற்க வைக்க வேண்டும், இவை அனைத்தையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.
இதேபோல், ஐநாவின் உலக சுகாதார நிறுவனம், நிகழாண்டில் (2025) மட்டும் 16 பிரதேசங்களில் சுமார் 800 சுகாதாரப் பணிகளின் மீது நடைபெற்ற தாக்குதல்களில், 1,110-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கஜகஸ்தான் ராணுவத்தில் புதியதாக செய்யறிவு பிரிவு உருவாக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.