
கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்ட விமானத்தின் என்ஜினில் நடுவானில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விமானத்தை பத்திரமாக விமானிகள் தரையிறக்கினர்.
கிரீஸ் நாட்டின் கோர்ஃபு விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நகருக்கு கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி காண்டோர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 757 ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இதில், 273 பயணிகள், 8 விமான ஊழியர்கள் பயணித்தனர்.
இந்த விமானம் புறப்பட்ட சில மணிநேரங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, வலதுபுற என்ஜினில் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதையறிந்த விமானிகள், அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவலை கொடுத்து இத்தாலியின் பிரின்டிசி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினர்.
பத்திரமாக தரையிறக்கியது எப்படி?
விமானத்தின் வலதுபுற என்ஜினில் தீப்பற்றியதை அறிந்த விமானிகள் உடனடியாக அந்த என்ஜினை அணைத்துள்ளனர். இதனால், விமானத்தின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
முதலில் கோர்ஃபு விமான நிலையத்துக்கு திரும்ப முயற்சித்த நிலையில், பின்னர் மற்றொரு என்ஜின் உதவியுடன் தொடர்ந்து பறக்க முடிவு செய்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட பிறகு சுமார் 40 நிமிடங்கள் வரை வானத்தில் பறந்து, இத்தாலியின் பிரின்டிசி விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்ட பின்னர், விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர்.
விமானத்தின் ஒரு என்ஜின் அணைக்கப்பட்டதால், விமானத்தின் உள்ளே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பயணிகள் அனைவரும் பீதியடைந்துள்ளனர்.
பிரின்டிசி விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கோரிய காண்டோர் ஏர்லைன்ஸ், மாற்று விமானம் மூலம் பயணிகளை ஜெர்மனிக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே, ஒரு என்ஜினில் தீ எரிந்தபடி விமானம் பறக்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும், விமானத்தின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.