பாலஸ்தீன மேற்கு கரையை இரண்டாகப் பிரிக்கும் திட்டம்! இஸ்ரேல் ஒப்புதல்!

மேற்கு கரையை இரண்டாகப் பிரிக்கக்கூடிய திட்டத்துக்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது குறித்து...
மேற்கு கரையில் (கோப்புப் படம்)
மேற்கு கரையில் (கோப்புப் படம்)ஏபி
Published on
Updated on
1 min read

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொண்டு, அப்பகுதியை இரண்டாகப் பிரிக்கக்கூடிய சர்ச்சைக்குரிய திட்டத்துக்கு, இஸ்ரேல் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜெருசலேம் நகரத்துக்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, மேற்கு கரையின் ஈ1 (E1) பகுதியில் கட்டுமானங்களை மேற்கொள்ள இஸ்ரேல் அரசு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் திட்டமிட்டு வருகின்றது.

ஆனால், சர்வதேச அளவில் உருவான எதிர்ப்புகள் மற்றும் அமெரிக்காவின் அழுத்தம் ஆகியவற்றால், இந்தத் திட்டத்தை அந்நாட்டு அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால், அந்நாட்டின் திட்டம் மற்றும் கட்டுமானம் ஆணையம் அதற்கு, இன்று (ஆக.20) ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்மூலம், மேற்கு கரை பகுதியானது இரண்டாகப் பிரிக்கப்படும் எனக் கூறப்படும் நிலையில், சில மாதங்களில் அப்பகுதியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் பாலஸ்தீனம் எனும் தனி நாட்டின் திட்டத்தை முற்றிலும் அழிக்கக் கூடும் என பாலஸ்தீனர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில், இஸ்ரேலியர்களுக்கான சுமார் 3,500 வீடுகள் கட்ட அரசுத் திட்டமிட்டுள்ளதாக, இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசாலெல் ஸ்மோட்ரிச் கடந்த ஆக.14 ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

காஸா மற்றும் பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் உடனடியாகக் கைவிடவில்லை என்றால், வரும் செப்டம்பர் மாதம் பாலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்படும் என பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.

ஆனால், மேற்கு கரையில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், பாலஸ்தீனம் எனும் திட்டம் புதைக்கப்படுகிறது என்றும், சர்வதேச அளவில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க அங்கு ஒன்றும் இருக்காது என்றும் இஸ்ரேல் அமைச்சர் பெசாலெல் கூறியிருந்தார்.

ஏற்கனவே, பாலஸ்தீன நகரங்களில் குடியேறும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் அங்குள்ள பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

கடந்த 1967-ம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் தற்போது 7 லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் குடியேறி வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆப்கன் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!

Summary

The Israeli government has approved a controversial plan to build in the occupied West Bank and divide the area in two.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com