அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.20 கோடி ரொக்கமாக கொடுத்தாரா புதின்? அவசியம் ஏன்?

அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.20 கோடி ரொக்கமாக புதின் அளித்ததாகவும், புதிய தடை உத்தரவுகளால் இந்த அசாதாரண நிகழ்வு ஏற்பட்டதாகவும் தகவல்.
புதின் - டிரம்ப்
புதின் - டிரம்ப்
Published on
Updated on
1 min read

உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த அலாஸ்கா வந்த புதின், ரஷியா திரும்ப தன்னுடைய விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப 250,000 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டியிருந்தது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி அலாஸ்கா வந்திருந்த ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் முக்கிய அதிகாரிகள் பயன்படுத்திய மூன்று விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்ப இந்திய மதிப்பில் ரூ.2.2 கோடியை அமெரிக்க டாலர்களில் அளித்திருக்கிறார்கள்.

இந்தத் தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவுக்கு ரஷிய அதிபர் புதின் கடந்த வாரம் வருகை தந்திருந்தார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ விமானங்கள் வானில் வட்டமடித்து மரியாதை அளிக்கப்பட்டது. ஆனால், மிகவும் அசாதாரணமாக நிகழ்வாக, புதின் தன்னுடைய விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப அமெரிக்க டாலரில் கொடுக்க வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விளக்கமளித்த மார்க்கோ ரூபியோ, ரஷிய விமானம் அமெரிக்காவுக்குள் வந்து திரும்பும்போது அவர்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால், அமெரிக்காவின் புதிய தடைகள் காரணமாக, அவர்களால் நமது வங்கி அமைப்பைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியாததால்தான், ரொக்கமாகப் பணம் கொடுக்கும் நிலை ஏற்பட்டது என்கிறார்.

புதின் மற்றும் அவரது குழுவினர், அலாஸ்காவில் சுமார் ஐந்து மணி நேரங்கள் இருந்தனர். குறிப்பிடத்தக்க அந்த சந்திப்பு மூன்று மணி நேரம் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, போர் நிறுத்த உடன்படிக்கை எதுவும் நிறைவேறவில்லை என்று டிரம்ப் அறிவித்த நிலையில், புரிதல் ஏற்பட்டதாக புதின் அறிவித்திருந்தார்.

புதினுடனான சந்திப்புக்குப் பின் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸிகியை, டிரம்ப் சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது, நேட்டோவில் உக்ரைன் சேர வாய்ப்பில்லை என்று டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com