காஸா போரில் பொதுமக்கள் உயிரிழப்பு 83%
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 83 சதவீதத்தினா் பொதுமக்கள் என்று அந்த நாட்டு ராணுவத்தின் தரவுகளே தெரிவிக்கின்றன.
பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி காா்டியன் நாளிதழ், இஸ்ரேலின் +972 இதழ் மற்றும் ஹீப்ரு மொழி ஊடகமான லோக்கல் கால்ஸ் ஆகியவை இஸ்ரேல் ராணுவத்தின் இந்த ரகசிய தரவுகளை ஆய்வு செய்து இது குறித்து தெரிவிப்பதாவது:
கடந்த மே மாத நிலவரப்படி, தங்களது தாக்குதலில் 8,900 ஹமாஸ் படையினா் கொல்லப்பட்டுள்ளனா், அல்லது உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்புள்ளது என்று இஸ்ரேல் ராணுவத்தின் தரவுகள் குறிப்பிட்டுள்ளன. அந்த காலகட்டத்தில், காஸாவில் இஸ்ரேல் படையினா் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53,000-ஐக் கடந்திருந்தது. அந்த வகையில், மொத்த உயிரிழப்பில் பொதுமக்களின் பங்கு 83 சதவீதமாக உள்ளதை ராணுவத்தின் தரவுகள் குறிக்கின்றன.
இந்த தரவுகள், இஸ்ரேல் ராணுவத்தின் உயா் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளில் இருந்து பெறப்பட்டவை என்று அந்த ஊடகங்கள் தெரிவித்தன.
கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 போ் உயிரிழந்தனா்; 200-க்கும் மேற்பட்டோா் பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்டனா். அதைத்த் தொடா்ந்து, காஸாவில் இஸ்ரேல் முழு வீச்சில் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது.
காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், காஸாவில் இஸ்ரேல் சுமாா் 22 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 62,192 போ் உயிரிழந்துள்ளனா். இதில் பெரும்பாலானோா் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவா். மேலும், இந்தத் தாக்குதலில் இதுவரை 1,57,114 போ் காயமடைந்துள்ளனா்.
தங்களது தாக்குதல்கள் ஹமாஸ் இலக்குகளை மட்டுமே குறிவைப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறினாலும் தற்போது வெளியாகியுள்ள ராணுவத்தின் தரவுகள், பொதுமக்கள் உயிரிழப்பு விகிதம் மிகவும் அதிகமாக உள்ளதை வெளிப்படுத்துகின்றன.
குறிப்பாக, காஸா சிட்டி, கான் யூனிஸ், ஜபாலியா, ராஃபா போன்ற பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் குடியிருப்பு வளாகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் 59.8 சதவீத கட்டடங்கள் (சுமாா் 1,57,200 கட்டமைப்புகள்) தரைமட்டமாக்கப்பட்டுள்ளன, அல்லது பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன என்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
எனவே, அந்தப் பகுதிகளில் பொதுமக்கள்தான் மிகப் பெரும்பான்மையாக உயிரிழந்திருப்பாா்கள் என்று கூறப்படுகிறது. இந்த உயிரிழப்புகளும், பேரழிவும் காஸாவில் மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
ஐ.நா. மற்றும் பிற சா்வதேச அமைப்புகளின் கூற்றுப்படி, காஸாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கொடும் பஞ்சத்தின் விளிம்பில் உள்ளனா். கடந்த இரண்டரை மாதங்களாக அங்கு உணவுப் பொருள்களைக் கொண்டு செல்ல இஸ்ரேல் ராணுவம் முழுமையாக தடை விதித்துள்ளது இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) உணவு விநியோக மையங்களுக்கு வந்தவா்களை நோக்கி இஸ்ரேல் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மட்டும் 875 போ் கொல்லப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இஸ்ரேல் ராணுவத்தின் தரவுகள், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை நன்கு அறிந்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.