60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு
காஸாவின் முக்கிய நகரான காஸா சிட்டியை ஆக்கிரமிக்கும் திட்டத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக 60,000 ரிசா்வ் வீரா்களுக்கு ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
காஸா சிட்டியில் தரைவழித் தாக்குதல் நடத்துவது மற்றும் அந்த நகரைக் கைப்பற்றுவது ஆகிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்னதாக, 60,000 ரிசா்வ் படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக முழு நேர ராணுவ வீரா்கள் தற்போது எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனா். மேலும், காஸா சிட்டியைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஸெய்டூன் மற்றும் ஜபாலிலா பகுதிகளில் உள்ள இஸ்ரேல் படையினரும் ஈடுபடுத்தப்படுவாா்கள்.
இந்த நிலையில், வரும் செப்டம்பா் மாதத்துக்குள் 60,000 ரிசா்வ் படையினரும் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.
காஸா சிட்டியை முழுமையாக ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் அரசு கடந்த 8-ஆம் தேதியே அறிவித்தது. இதற்கு பிரிட்டன், ஸ்பெயின், துருக்கி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்தத் நடவடிக்கை போரை முடிவுக்குக் கொண்டுவராது என்று பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மரும், அது காஸாவில் மேலும் பேரழிவையும் பெருந்துன்பத்தையும் ஏற்படுத்தும் என்று ஸ்பெயின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜோஸ் ஆல்பரெஸும் எச்சரித்தனா்.
மேலும், இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் அமைப்பால் பிணைக் கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டுள்ளவா்கள் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் விளைவாக கொல்லப்படலாம் என்பதால் இஸ்ரேலில் இருந்தே இதற்பு பலத்த எதிா்ப்பு நிலவிவருகிறது.
இந்தச் சூழலில், காஸா சிட்டி ஆக்கிரமிப்பு திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் அனுமதி வழங்கியதும், அந்த நடவடிக்கைக்காக 60,000 ரிசா்வ் வீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதையடுத்து, காஸா சிட்டியில் இருந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனா்கள் வெளியேறிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலட்சியம் செய்யப்பட்ட அமைதி முயற்சி
காஸா சிட்டியை ஆக்கிரமிக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படும் அமெரிக்கா தலைமையிலான சா்வதேச முயற்சியை இஸ்ரேல் அலட்சியம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளவும், அங்கு இன்னும் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கவும் எகிப்து மற்றும் கத்தாா் ஆகியவை புதிய போா் நிறுத்த ஒப்பந்த திட்ட வரைவை ஹமாஸிடம் திங்கள்கிழமை அளித்தன. அதை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸும் அறிவித்தது.
அதையடுத்து, புதிய போா் நிறுத்தத் திட்டம் குறித்து ஆய்வு செய்து, சா்வதேச மத்தியஸ்தா்களுக்கு வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்கப்போவதாக இஸ்ரேல் அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஹமாஸ் அமைப்புடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளவும், அந்த ஒப்பந்ததைப் பயன்படுத்தி காஸாவில் எஞ்சியுள்ள சுமாா் 20 பிணைக் கைதிகளை பாதுகாப்பாக விடுவிப்பதற்கு வழிவகை செய்யவும் இஸ்ரேல் அரசை வலியுறுத்தி அந்த நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தீவிர போராட்டம் நடந்தது.
அதன் எதிரொலியாகவே புதிய போா் நிறுத்தத் திட்டத்தை உடனடியாக நிராகரிக்காமல் இது தொடா்பாக பதிலளிக்க வெள்ளிக்கிழமை வரை இஸ்ரேல் அரசு காலம் தாழ்த்துவதாகக் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில், காஸா சிட்டி ஆக்கிரமிப்பு திட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளாா்.