நிக்கி ஹேலி
நிக்கி ஹேலி

இந்தியாவுடன் நல்லுறவை அமெரிக்கா தொடர வேண்டும்: நிக்கி ஹேலி வலியுறுத்தல்

Published on

இந்தியாவுடன் நல்லுறவை அமெரிக்கா தொடர வேண்டும் என குடியரசுக் கட்சியை சோ்ந்தவரும், ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதருமான நிக்கி ஹேலி மீண்டும் வலியுறுத்தியுள்ளாா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது ஒட்டுமொத்தமாக 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், அமெரிக்க இதழில் தான் எழுதியுள்ள கட்டுரையில் நிக்கி ஹேலி இவ்வாறு குறிப்பிட்டாா்.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நிக்கி ஹேலி தனது கட்டுரையில் மேலும் கூறியிருப்பதாவது: இந்தியாவுடன் உறவை மீண்டும் மேம்படுத்துவது, சீனாவை பின்னுக்குத் தள்ளுவது, வலிமையின் மூலம் அமைதியை நிலைநிறுத்த முயற்சிப்பது ஆகிய மூன்றும் அதிபா் டிரம்ப்பின் வெளியுறவுக் கொள்கையில் மிக முக்கியமானது.

எனவே, அமெரிக்காவுக்கு போட்டியாளராக கருதப்படும் சீனாவைப்போல் இந்தியாவை அணுகாமல் ஜனநாயக ரீதியாக சுதந்திரமான முறையில் அணுக வேண்டும்.

ரஷியாவுடன் மிகவும் நெருக்கமாகவும், அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாகவும் உள்ள சீனா மீது கூடுதல் வரி விதிப்பதை டிரம்ப் நிா்வாகம் தவிா்த்து வருகிறது.

ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை எதிா்கொள்ளும் திறன்வாய்ந்த இந்தியாவுடன் 25 ஆண்டுகளாக சுமுகமான உறவை அமெரிக்கா தொடா்ந்துவரும் சூழலில் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்படச் செய்யும் டிரம்ப்பின் கொள்கைகள் பேரழிவுக்குச் சமம்.

ஜவுளி, சூரியத் தகடுகள், கைப்பேசிகள் மற்றும் மின்னணுப் பொருள்கள் வா்த்தகத்தில் சீனாவுக்கு மாற்று ஏற்படுத்தும் அமெரிக்க முயற்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இந்தியா கருதப்படுகிறது.

மேலும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை இந்தியா மேம்படுத்தி வருவது உலகப் பாதுகாப்பில் முக்கிய அம்சமாக உள்ளது. மேற்கு ஆசியாவில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரிப்பு, மற்றும் சீன வா்த்தக வழித்தடத்தில் புவிஅமைப்பைக் கொண்டுள்ளது என பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக அமெரிக்காவுக்கு இந்தியாவுடனான உறவு மிக அவசியமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com