5.5 கோடி விசாக்கள் மறுபரிசீலனை: அமெரிக்கா அறிவிப்பு! இந்தியர்கள் மட்டும் 50 லட்சம் பேர்!!

அமெரிக்கா 5.5 கோடி விசாக்களை மறு பரிசீலனை செய்யவிருக்கிறது, இதில் இந்தியர்களே 50 லட்சம் பேர்.
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்
Published on
Updated on
2 min read

அமெரிக்காவில் தற்போது தங்கியிருக்கும் 5.5 கோடி பேரின் விசாக்களை மறு ஆய்வு செய்யப்போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கானோர், அமெரிக்காவில் பணி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களைப் பெற்று தங்கியிருக்கிறார்கள்.

அதன்படி, 5.5 கோடி விசாக்களை மறுபரிசீலனை செய்து, அவற்றில் ஏதேனும் அத்துமீறல் விவகாரங்கள் இருப்பின், விசாவை ரத்து செய்வது மற்றும் அவர்களை வெளிநாட்டுக்கு கடத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குடியுரிமைத் துறை எடுத்து வரும் அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்வதற்காக இந்த மறுபரிசீலனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சுற்றுலா, மாணவர்கள், தொழில்முறை பயணம் உள்ளிட்ட விசாக்களை வைத்திருப்பவர்கள், தொடர்ச்சியான ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, அவர்களுக்கான அடிப்படைத் தகுதிகள் இருக்கிறதா? விசா காலத்தைத் தாண்டி வாழ்ந்துகொண்டிருக்கிறார்களா? குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா? மக்களின் பாதுகாப்பு இடையூறு ஏற்படுத்துகிறார்களா என்பது மற்றும் அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருக்கிறதா என்பது உள்ளிட்ட விவகாரங்களையும் பரிசீலிக்க அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்த மறுஆய்வு நடவடிக்கையானது, விசா பெற்றிருப்பவர்களின் சமூக வலைத்தளங்களை ஆராய்வது, சட்ட அமலாக்கத் துறை, விசா பெற்றிருப்பவரின் சொந்த நாட்டில் பதிவாகியிருக்கும் குடியுரிமைப் பதிவுகள், அமெரிக்க சட்டத்தை மீறும் வகையில் நடந்து கொள்கிறாரா என்பது உள்ளிட்ட விவரங்களும் ஆய்வுக்கு உள்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா நேர்காணல்களின்போது, எலாக்ட்ரானிக் சாதனங்கள் முடக்கப்படுவது உள்ளிட்ட புதிய விதிமுறைகள் இந்த ஆணடு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல், உள்நாட்டு வருவாய் சேவை துறையிடமிருந்து குடியுரிமை பெற்றவர்களின் வரி தரவுகளையும் பெற்று ஏதேனும் விதிமீறல் நடக்கிறதா என்பதை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவேளை, அமெரிக்காவில் விசா பெற்று தங்கியிருப்பவர்கள் யாரேனும் ஏதோ ஒரு விதிமீறல்களில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது.

இதன்படி, இந்தியாவைச் சேர்ந்த 50 லட்சம் பேர், அமெரிக்காவின் குடியுரிமை அல்லாத விசாக்களை வைத்திருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, சுற்றுலா, வணிகம், கல்வி மற்றும் பி1/பி2 பார்வையாளர் விசா, எஃப்1 மாணவர்கள் விசா, எச்-ஃபி வேலை விசாக்கள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.

இந்த மறுபரிசீலனை நடவடிக்கையானது, முதற்கட்டமாக, கல்வி விசா பெற்று வந்திருக்கும் மாணவர்கள், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான அல்லது இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளில் கல்லூரிகளில் ஈடுபட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் தொடக்கமாக இருந்துள்ளது. இது கடந்த ஜனவரி முதல் நடந்து வருகிறது. டிரம்ப் அதிபராக பதவியேற்றது முதல், அமெரிக்க உள்துறை அமைச்சகம் சுமார் 6000 மாணவர்கள் விசாக்களை ரத்து செய்திருக்கிறது. இதில், விசாக் காலத்தைத் தாண்டி தங்கியிருப்பது, யாரையாவது தாக்குவது, போதையில் வாகனம் இயக்குவது உள்ளிட்ட காரணங்களுக்காகவும் மற்றும் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்தது உள்ளிட்ட காரணங்களுக்காவும் மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

சாலை விபத்தால் விசாக்கள் நிறுத்தி வைப்பு..

ஃப்ளோரிடாவில் நடந்த சாலை விபத்து காரணமாக, வணிக லாரி ஓட்டுநர்களுக்கான பணி விசாக்கள் அனைத்தையும் நிறுத்தி வைக்கிறோம், இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு உள்துறை செயலர் அறிவித்துள்ளார்.

ஃப்ளோரிடாவில், இந்திய சீக்கிய ஓட்டுநர் இயக்கிய டிரக், மிக மோசமான வளைவு ஒன்றில் கவனக்குறைவுடன் திரும்பியதால், மினி வேனில் வந்த அமெரிக்கர்கள் மூன்று பேர் மரணமடைந்தனர். இதில் கைது செய்யப்பட்டவர் ஹர்ஜிந்தர் சிங் என்பதும், அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், ஆங்கிலத்தில் அவரிடம் கேட்கப்பட்ட 12 கேள்விகளுக்கு அவர் வெறும் 2 கேள்விகளுக்கு மட்டுமே சரியான பதிலளித்ததும், அமெரிக்க சாலைப் போக்குவரத்து சமிக்ஜைகளில் 4ல் ஒன்றைத்தான் அவர் சரியாகச் சொன்னதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கச் சாலைகளில் மிகப்பெரிய கனரக வாகனங்களை இயக்கும் வெளிநாட்டு ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் ஏற்படும் பாதிப்புகளில் அமெரிக்கர்கள் பலியாவதோடு, இவர்களது வேலைவாய்ப்புகளால், அமைரிக்க ஓட்டுநர்களின் வேலை பறிபோகிறது என்றும் அமெரிக்க உள்துறை அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com