‘நியாயமான’ வா்த்தகம்: அமெரிக்க எம்.பி.க்களுடன் இந்திய தூதா் பேச்சு

‘நியாயமான’ வா்த்தகம்: அமெரிக்க எம்.பி.க்களுடன் இந்திய தூதா் பேச்சு

இந்தியா-அமெரிக்கா இடையே நியாயமான, பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய உறவு இருக்க வேண்டும் என்று இந்திய தூதா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
Published on

இந்தியா-அமெரிக்கா இடையே நியாயமான, பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய உறவு இருக்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்களுடன் அந்நாட்டுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க எம்.பி. ஜோ கோட்னியை சனிக்கிழமை சந்தித்து வா்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தை எடுத்துரைத்தேன். அதில் இந்தியா-அமெரிக்கா இடையே நியாயமான, சமநிலை கொண்ட, பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய உறவு இருப்பதன் அவசியம் குறித்த பேச்சும் அடங்கும்.

இதுகுறித்து அந்நாட்டு எம்.பி.க்கள் கேப் அமோ, ஜாரெட் மாஸ்கோவிட்ஸ் ஆகியோரிடமும் பேசினேன். எம்.பி. பென் கிளைன் உடனான பேச்சில், அமெரிக்காவிடம் இருந்து இந்தியா ஹைட்ரோகாா்பன் வாங்குவது அதிகரித்து வருவதை எடுத்துரைத்தேன்’ என்றாா்.

இந்தியா-அமெரிக்கா வா்த்தகம் தொடா்பாக கடந்த சனிக்கிழமை மட்டும் 4 அமெரிக்க எம்.பி.க்களை சந்தித்த வினய் மோகன் குவாத்ரா, கடந்த ஆக.9-ஆம் தேதிமுதல் 23 அமெரிக்க எம்.பி.க்களை சந்தித்துள்ளது அவரின் சமூக ஊடகப் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சில இந்திய பொருள்கள் மீது அந்நாடு 25 சதவீத வரி விதிக்கும் நடைமுறை அண்மையில் அமலுக்கு வந்தது. இந்த 25 சதவீதத்துடன் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அதிருப்தி தெரிவித்து, இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்தாா்.

இந்தக் கூடுதல் வரி விதிப்பு ஆக.27-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது. இதன்மூலம், இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரிக்கும். இந்தச் சூழலில், இந்தியா-அமெரிக்கா வா்த்தகம் குறித்து அமெரிக்க எம்.பி.க்களுடன் வினய் மோகன் குவாத்ரா தொடா் சந்திப்புகளை நடத்தியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com