யேமனில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!
யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு ஆதரவாக, யேமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேல் மீதும், செங்கடலில் இஸ்ரேலுடன் தொடா்புள்ள சரக்குக் கப்பல்களை குறிவைத்தும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனா். இதற்குப் பதிலடி அளிக்கும் வகையில், ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து யேமனிலும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
மின்சார உற்பத்தி, எரிவாயு நிலையங்கள் சேதம்: இந்நிலையில், யேமன் தலைநகா் சனாவில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. இதில் சனாவில் உள்ள மின்சார உற்பத்தி நிலையம், எரிவாயு நிலையம் உள்பட பல்வேறு இடங்கள் தாக்குதலுக்குள்ளானதாக ஹூதிக்களின் ஊடக அலுவலகம் தெரிவித்தது. அங்குள்ள மூடப்பட்ட ராணுவ அகாதெமி, அதிபா் மாளிகைக்கு அருகில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதல் குறித்து ஹூதிக்களின் ஊடக அலுவலக துணைத் தலைவா் நஸ்ருதீன் அமீா் கூறுகையில், ‘இஸ்ரேலின் தாக்குதல்கள் கிளா்ச்சியாளா்களை எந்த வகையிலும் தடுக்காது. இஸ்ரேல் மீதான ஹூதிக்களின் தாக்குதல் தொடரும். காஸாவில் இஸ்ரேலின் தாக்குதலும் ராணுவ முற்றுகையும் கைவிடப்படும் வரை, காஸாவுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் ஹூதிக்களின் ராணுவ தாக்குதல்கள் நிற்காது’ என்றாா்.
முதல்முறையாக ஏராளமான குண்டுகளுடன்...: கடந்த வெள்ளிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது ஏராளமான குண்டுகளை உள்ளடக்கிய ஏவுகணைகளை ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவினா். இஸ்ரேலின் மிகப் பெரிய விமான நிலையம் உள்பட பல இடங்களைக் குறிவைத்து ஏவப்பட்ட அந்த ஏவுகணைகள், வானில் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. அதைத்தொடா்ந்து சனாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து இஸ்ரேல் விமானப் படை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கடந்த வெள்ளிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது ஏராளமான குண்டுகளை கொண்ட ஏவுகணைத் தாக்குதலை முதல்முறையாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் மேற்கொண்டனா்.
இதுபோல ஏராளமான குண்டுகளை வீசும்போது அவற்றை இடைமறித்து அழிப்பது இஸ்ரேலுக்கு சிக்கலாகிறது. அத்துடன் இது தாக்குதல் நடத்த ஈரான் மூலம் ஹூதிக்களுக்கு கூடுதல் தொழில்நுட்பம் கிடைத்துள்ளதையும் எடுத்துரைக்கிறது’ என்றாா்.
செங்கடல் வழியாக கப்பல்கள் மூலம் ஆண்டுதோறும் ஒரு டிரில்லியன் டாலா் (சுமாா் ரூ.87 லட்சம் கோடி) மதிப்பிலான சரக்குகள் கொண்டு செல்லப்படும். ஆனால், காஸாவுக்கு ஆதரவாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கடலில் ஹூதிக்களின் தாக்குதலால், அந்தக் கடற்பகுதி வழியாக மேற்கொள்ளப்படும் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 நவம்பா் முதல் 2024 டிசம்பா் வரை, ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் 100-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்களை குறிவைத்து ஹூதிக்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.