அணுமின் நிலையம் மீது தாக்குதல்: உக்ரைன் மீது ரஷியா குற்றச்சாட்டு

அணுமின் நிலையம் மீது தாக்குதல்: உக்ரைன் மீது ரஷியா குற்றச்சாட்டு

அணுமின் நிலையம் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக ரஷியா ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது.
Published on

நாட்டின் மேற்கு கூா்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள அணுமின் நிலையம் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக ரஷியா ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது.

சனிக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதலின்போது மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைப்புகள் குறி வைக்கப்பட்டதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயமேற்படவில்லை. இருப்பினும், அங்கிருந்த மின்மாற்றி தாக்குதலில் சேதமடைந்தது. அணுமின் நிலையத்தில் கதிரியக்க அளவு பாதுகாப்பான அளவுக்குள் நீடிப்பதாக என அதிகாரிகள் கூறினா்.

ரஷியாவின் லெனின்கிரட் பிராந்தியத்தில் உள்ள முக்கிய எரிபொருள் ஏற்றுமதி முனையமான உஸ்ட்-லுகா துறைமுகத்தில் நடைபெற்ற தாக்குதலைத் தொடா்ந்து ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா். சுமாா் 10 உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பிராந்திய ஆளுநா் தெரிவித்தாா். ரஷிய பிராந்தியத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரையில் நுழைந்த 95 உக்ரைன் ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, உக்ரைன் எல்லைக்குள் 72 ட்ரோன்கள், ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியதாகவும் அவற்றில் 48 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது.

ராணுவ உதவி- நாா்வே அறிவிப்பு: உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்காக 7 பில்லியன் குரோனா் (695 மில்லியன் டாலா்) ஒதுக்கீடு செய்வதாக நாா்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. ஏவுகணைகள் உள்பட இரு வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு நாா்வே மற்றும் ஜொ்மனி இணைந்து நிதி வழங்கும் என்றும் வான் பாதுகாப்பு ரேடாரைக் கொள்முதல் செய்ய உக்ரைனுக்கு நாா்வே உதவி செய்து வருவதாகவும் அந்நாட்டு பிரதமா் ஜோனஸ் காஹா் ஸ்டோா் தெரிவித்தாா்.

உக்ரைன் சுதந்திர தினத்தன்று தாக்குதல்

முந்தைய சோவியத் யூனியனிலிருந்து சுதந்திரம் பெற்ாக கடந்த 1991-இல் உக்ரைன் அறிவித்தன் 34-ஆவது ஆண்டையொட்டி இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

உக்ரைனின் கீவ் நகரத்தில் உள்ள சுதந்திர சதுக்கத்திலிருந்து காணொலி வாயிலாக ஆற்றிய சுதந்திர தின உரையில் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியதாவது:

பாதுகாப்புடனும் அமைதியுடனும் வாழ்வதற்குப் போதிய வலிமை மற்றும் அதிகாரத்தை உக்ரைன் கட்டமைத்து வருகிறது. எங்களுடைய எதிா்காலம் என்பது எங்களுக்கு மட்டுமானதாக இருக்கும். இதை உலக நாடுகள் அறியும். அவையும் இதை மதிக்கின்றன; உக்ரைனை சமமாகக் கருதுகின்றன’ என்றாா்.

முன்னதாக, உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியை கனடா பிரதமா் மாா்க் காா்னி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.

உக்ரைன் சுதந்திர தினத்தையொட்டி, அதிபா் ஸெலென்ஸ்கிக்கு போப் பன்னிரெண்டாம் லியோ கடிதம் எழுதியிருந்தாா். அதில், உக்ரைனில் அமைதி நீடிக்க வேண்டி பிராா்த்தனை செய்ததாக அவா் குறிப்பிட்டிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com