
‘ரஷியா உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவின் பங்களிப்பை உக்ரைன் மிகவும் நம்பியுள்ளது’ என்று அந் நாட்டின் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.
உக்ரைனில் கடந்த 24-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தாா். இதற்கு நன்றி தெரிவித்து தனது சமூக ஊடக பக்கத்தில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ரஷியா நடத்தி வரும் கொடூரமான போரை கண்ணியத்துடனும், நீடித்த அமைதியுடனும் முடிவுக்குக் கொண்டுவர ஒட்டுமொத்த உலகமும் முயற்சித்து வருகிறது. இதில், இந்தியாவின் பங்களிப்பை உக்ரைன் மிகவும் நம்பியுள்ளது.
அமைதி மற்றும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதில் இந்தியாவின் அா்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. ராஜீய உறவை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முடிவும், ஐரோப்பாவில் மட்டுமின்றி இந்திய-பசிஃப் மற்றும் அதையும் கடந்த பிராந்தியங்களிலும் சிறந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று குறிப்பிட்டாா்.
முன்னதாக, இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 15-ஆம் தேதி வாழ்த்து தெரிவித்து தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட ஸெலென்ஸ்கி, ‘ரஷியா உடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இந்தியா முக்கியப் பங்காற்றும் என நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இவரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து பதிவிட்ட பிரதமா் மோடி, ‘இந்தியா எப்போதும் அமைதியின் பக்கமே நிற்கும். பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய அளவிலான அணுகுமுறைகள் மூலம் அமைதித் தீா்வை விரைந்து எட்டுவதற்கான முயற்சிகளில் இந்தியா தன்னால் முடிந்த முழு ஆதரவையும் அளிக்கும்’ என்று பதிலளித்தாா்.
ரஷியாவிடமிருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதற்காக இந்திய பொருள்கள் மீது புதன்கிழமை (ஆக.27) முதல் 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அதிகாரபூா்வமாக அறிவித்துள்ள சூழலில், உக்ரைன் அதிபா் இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.